4663. என்னவா அனைத்தும் ஈந்தவா என்னை
ஈன்றவா என்னவா வேதம்
சொன்னவா கருணைத் தூயவா பெரியர்
துதியவா அம்பலத் தமுதம்
அன்னவா அறிவால் அறியரி வறிவா
ஆனந்த நாடகம் புரியும்
மன்னவா என்றேன் வந்தருட் சோதி
வழங்கினை வாழிநின் மாண்பே.
உரை: யான் விரும்பியவை யெல்லாம் எனக்குத் தந்தவனே! என்னைப் பெற்ற தந்தையே! என்னை யுடையவனே! வேதங்களை யுரைத்தவனே! கருணை நிறைந்த தூயவனே! பெரியவர்களால் துதிக்கப்படுபவனே! அம்பலத்தில் எழுந்தருளும் அமுதம் போன்றவனே! பசுபாச அறிவுகளால் அறியப்படாமல் சிவஞானத்தால் அறியும் அறிவுருவானவனே! ஆனந்தக் கூத்தாடும் ஆடலரசே என்றெல்லாம் வேண்டினேனாக, என்பால் வந்து அருட்சோதி வழங்கினாயாதலால் நின் மாண்பு நெடிது வாழ்க. எ.று.
என் அவா - என்னுடைய விருப்புக்கள். என்னவன் - என்னைச் சேர்ந்தவன். பெரியோர் செய்யும் துதிகளை ஏற்று மகிழ்பவனாதலால், “பெரிய துதியவா” என்று சொல்லுகின்றார். அறிவால் அறிவு அறிவு அறிவா, பசுபாச அறிவுகளால் அறியப்படாமல் உண்மையறிவாகிய சிவஞானத்தால் அறியப்படுகின்ற அறிவை யுடையவன். ஆனந்த நாடகம் - ஆனந்த தாண்டவம். (9)
|