467. இன்பப் பெருக்கே அருட்கடலே
இறையே அழியா விரும்பொருளே
துன்பர்க் கருளும் பெருங்கருணை
அரசே யுணர்வா லாம்பயனே
வனபர்க் கரிதாம் பரஞ்சோதி
வடிவேல் மணியே யணியேயென்
துன்பத் திடரைப் பொடியாக்கிச்
சுகந்தந் தருளத் துணியாயே.
உரை: இன்ப வெள்ளமாகிய முருகப் பெருமானே, அருட் கடலே, இறைவனே, அழிவில்லாத பெரும் பொருளே, அன்பர்களுக்குத் தடையிலாமல் அருளும் பெருங் கருணை யுருவாகிய அரசனே, உண்மை யுணர்வால் அடையும் பயனாகியவனே, வன்மனம் உடையார்க்குக் காண்பதரிதாகிய பரஞ்சோதியே, வடிவே லேந்தும் மாணிக்க மணியே, எப்பொருட்கும் அழகு தருபவனே, என்னுடைய துன்பமாகிய மேட்டினை யிடித்துப் பொடி யாக்கி யொழித்து எனக்கு இன்பந் தருதற்குத் திரு உள்ளங்கொள்வாயாக, எ. று.
இன்பப் பெருக்கே, அருட் கடலே என்பன ஆர்வ மொழிகள். பெரும் பரம்பொருளாதலின் முருகனை “அழியா இரும்பொருளே” என்கின்றார். யாவர் அன்பு செய்யினும் அருள் வழங்குவது தோன்ற, “அன்பர்க் கருளும் பெருங் கருணையரசே” என வுரைக்கின்றார். உணர் வுடையவரது உணர்வின் பயன் உலகிற்கே யன்றி அவர்க்கும் பயன்படுவது போல முருகனது திருவருள் உலகுயிர் அனைத்துக்கும் பயனாதலால், “உணர்வாலாம் பயனே” என ஓதுகின்றார். அன்பர்க்குப் பரஞ்சோதியாய் விளங்குபவன், அன்பரல்லாத வன்பர்க்கு அரியனாயினும் அங்ஙனமே தோன்றுதல் விளங்க, “வன்பர்க் கரிதாம் பரஞ்சோதி” என்கின்றார். அணி - அழகு. உயிராகிய நிலத்தில் இன்பம் விளைதற்கு இடையூறாகத் துன்பமாகிய மேடு நின்று ஞான நீரைத் தடை செய்வது பற்றித் “துன்பத் திடரைப் பொடி யாக்கிச் சுகம் தந்தருள்வாய்” என்றும், திருவுள்ளத்தில் எண்ணினாலே போதும் எனற்குத் தந்தருளாய் என்னாமல், “தந்தருளத் துணியாய்” என்றும் இயம்புகின்றார்.
இதனால், துன்பம் நீக்கி இன்ப மருள எண்ணி யருள்க என முருகனை வேண்டியவாறாம். (8)
|