பக்கம் எண் :

4676.

          நான்செய்த புண்ணியம் என்னுரைப் பேன்பொது நண்ணியதோர்
          வான்செய்த மெய்ப்பொருள் என்கையிற் பெற்றுமெய் வாழ்வடைந்தேன்
          கோன்செய்த பற்பல கோடிஅண் டங்களும் கூறவற்றில்
          தான்செய்த பிண்டப் பகுதியும் நான்செயத் தந்தனனே.

உரை:

     நான் செய்த புண்ணியத்தின் பயனை என்னென்று சொல்வேன்; என்னையெனில், பொதுவாகிய அம்பலத்தில் காட்சி தருகின்ற பெருமை சான்ற மெய்ப்பொருளாகிய திருவருளைக் கைவரப் பெற்று மெய்ம்மையான அருள் வாழ்வு எய்தப் பெற்றேன்; தலைவனாகிய சிவன் படைத்த பற்பல கோடி யண்டங்களையும் அவற்றுட் கூறப்படும் பிண்டப்பகுதியையும் நான் செய்தற்குரிய திருவருளை எனக்குத் தந்துள்ளான். எ.று.

     மெய்ப்பொருள் - திருவருள் ஞானம். கையிற் பெறுதலாவது கைவரப் பெறுதல். மெய் வாழ்வு - திருவருள் வாழ்வு. கோன் - தலைவனாகிய சிவபெருமான்; பெருமைப் பொருளில் வரும் கொள் என்பது கோன் என நீண்டதாகக் கொண்டு, பற்பலவாகிய பெரிய அண்டங்களையும் என வுரைப்பினும் பொருந்தும். தான் சிவம் பெற்ற வழி, சிவத்தின் படைப்பாற்றலும் எனக்கு எய்துகிறது என்பதற்கு, “நான் செய்த பிண்டப் பகுதி” என நவில்கின்றார். அண்டம் பெரியது; பிண்டம் சிறியது என அறிக.

     (2)