4677. திருநிலை பெற்றனன் அம்பலத் தான்அருள் தெள்ளமுதுண்
டுருநிலை பெற்றனன் ஒன்றே சிவமென ஓங்குகின்ற
பெருநிலை பெற்றனன் சுத்தசன் மார்க்கம் பிடித்துநின்றேன்
இருநிலை முந்நிலை எல்லா நிலையும் எனக்குளவே.
உரை: சிவானந்தம் நுகரும் சிறந்த நிலையைப் பெற்றுள்ள யான் தில்லையம்பலத்தையுடைய சிவபெருமானது திருவருளாகிய தெள்ளமுதை யுண்டு என் தேகத்தை நிலையாகப் பெற்றுக் கொண்டேன்; ஒன்றாகிய சிவம் என்று ஓங்குகின்ற பெரிய இன்ப நிலையை எய்தினேன்; சுத்த சன்மார்க்க நெறியை மேற்கொண்டிருக்கின்றேன்; உருவம் அருவம் என்ற இரண்டு நிலையும் இலயம் போகம் அதிகாரம் என்ற மூவகை நிலையும் பிறவும் என்பால் உளவாயின. எ.று.
உரு என்றது தேகத்தை என அறிக. சாகா நிலையைப் பெற்றேன் என வுரைக்கின்றாராதலால் அதற்கு ஏதுவாகிய திருவருளை விதந்து, “அருள் தெள்ளமுதுண்டு உருநிலை பெற்றேன்” என்று ஓதுகின்றார். சிவமாம் தன்மை எய்திய நலத்தைச் “சிவமென வோங்குகின்ற பெருநிலை பெற்றனன்” என்று கூறுகிறார். சிவத்துக்கு அருவுருவமெனப்படும் சாதாக்கிய முதலிய பலநிலைகளுண்மையின், “எல்லா நிலையு”மென இயம்புகின்றார். (3)
|