பக்கம் எண் :

4678.

          எத்தனை நான்குற்றம் செய்தும் பொறுத்தனை என்னைநின்பால்
          வைத்தனை உள்ளம் மகிழ்ந்தனை நான்சொன்ன வார்த்தைகள்இங்
          கத்தனை யும்சம் மதித்தருள் செய்தனை அம்பலத்தே
          முத்தனை யாய்நினக் கென்மேல் இருக்கின்ற மோகம்என்னே.

உரை:

     அம்பலத்தில் எழுந்தருளும் முத்துப் போன்றவனே! நான் எத்தனைக் குற்றங்களைச் செய்தாலும் அத்தனையும் பொறுத்து என்னை நின்பால் வைத்துக் கொண்டு உள்ளம் மகிழ்ந்தருளினாய்; நான் சொன்ன சொற்கள் யாவற்றையும் இசைந்து ஏற்றுக் கொண்டாய்; உனக்கு என்மேலுள்ள காதலன்பை என்னென்பது. எ.று.

           நின்னையன்றி வேறு யாதும் பற்றலாவதில்லை என்ற உணர்வே எஞ்ஞான்றும் எவ்விடத்தும் நிலவுதலால், “என்னை நின்பால் வைத்தனை உள்ளம் மகிழ்ந்தனை” என வுரைக்கின்றார். எனது உறவு மேன்மேலும் மிகுந்த வண்ணமிருத்தலால், இங்கு, “நான் சொன்ன வார்த்தைகள் அத்தனையும் சம்மதித் தருள் செய்தனை” என்று மொழிகின்றார். முத்து - நவமணிகளுள் ஒன்றாதலின், “முத்தனையாய்” என உயிர்ப்பொருளாகக் கொள்கின்றார்.

     (4)