பக்கம் எண் :

4682.

          ஆக்கிய நாள்இது தான்தரு ணம்அருள் ஆரமுதம்
          தேக்கிமெய் இன்புறச் செய்தருள் செய்தருள் செய்தருள்நீ
          நீக்கினை யேல்இனிச் சற்றும்பொ றேன்உயிர் நீத்திடுவேன்
          தூக்கிய பாதம் அறியச்சொன் னேன்அருட் சோதியனே.

உரை:

     அருட் சோதியாகிய ஆண்டவனே! சிவயோகானந்தத்தை எய்துதற்கு நாளும் தருணமும் இதுவாகுமாதலால் உனது திருவருளாகிய அருமையான அமுதத்தை என்னுள் நிறைத்து யானும் அதனால் மெய்யின்பம் பெறச் செய்தருள்க; அது செய்யாது என்னைப் புறம் போக்குவாயானால் இப்பொழுது சிறிதும் பொறுக்க மாட்டாமல் உயிரை விட்டு விடுவேன்; இதனை அம்பலத்தில் ஆடுதற்குத் தூக்கிய நினது திருவடி அறியச் சொல்லுகின்றேன். எ.று.

     யோகானாந்தப் பேற்றிற்குப் பொருந்திய நாளும் சமயமும் இதுவென வற்புறுத்தற்கு, “ஆக்கிய நாள் இது தருணம் இது” என எடுத்தோதுகின்றார். அருள் ஞானத்தை, “அருளார் அமுதம்” என்று குறிக்கின்றார். முன்பு மெய்ஞ்ஞான முழுதையும் தருகவென வேண்டினாராதலின், அதன்பால் உள்ள தனது ஆர்வத்தைப் புலப்படுத்தற்கு, “அருளார் அமுதம் தேக்கி மெய்யின்புறச் செய்தருள்” என்று வேண்டுகிறார். செய்தருள் செய்தருள் என்ற அடுக்கு இன்றியமையாமைக் குறித்து நின்றது. பொறேன் - முற்றெச்சம். முன்னர் ஊன்றிய திருவடியை “ஆடிய பாதம்” என்றாராதலின், தூக்கி ஆடிய திருவடியை உணர்த்த வேண்டித் “தூக்கிய பாதம்” என்று சொல்லுகின்றார்.

     (8)