பக்கம் எண் :

4684.

          ஆர்கின்ற தெள்ளமு தின்சுவை என்என் றறைவன் அந்தோ
          சார்கின்ற சிற்றம் பலப்பெருஞ் சீரினைச் சாற்றுதொறும்
          சேர்கின்ற நாவுடன் உள்ளமும் ஆவியும் தித்தித்தலே
          நேர்கின்ற தால்என் அருட்பெருஞ் சோதி நிறைந்துளத்தே.

உரை:

     அருட் பெருஞ் சோதி உள்ளத்தில் நிறைதலால், என்னுள்ளத்திற் பரவிய திருவருள் ஞானாமிர்தமாகிய தெள்ளமுதின் சுவையை என்னென்று கூறுவேன்; யான் சார்தற்கமைந்த திருச்சிற்றம்பலவனும் சிறப்பை எடுத்தோதுந் தோறும் ஓதுதற் கமையும் எனது நாவுடன் உள்ளமும் உயிரும் இனிக்கின்றன. எ.று.

     சார்தல் - அடைதல். திருவருள் நிறைவு “சீர்” எனப்படுகிறது. சாற்றுதல் - சொல்லுதல். தித்தித்தலே நேர்தல் - தித்திப்பதையே செய்தல். நிறைந்து - காரணப் பொருளில் வந்த வினையெச்சம்.

     (2)