பக்கம் எண் :

471.

    காயா தளியக் கனிந்தன்பால்
            கல்லா டிநின் றருளொழுகும்
        கனியுட் சுவையே யடியர்மனக்
            கவலை யகற்றும் கற்பகமே
    ஓயாதுயிர்க்குள் ளொளித் தெவையும்
            உணர்த்தி யருளு மொன்றேயென்
        உள்ளக் களிப்பே யைம்பொறியும்
            ஒடுக்கும் பெரியோர்க் கோருறவே
    தேயாக் கருணைப் பாற்கடலே
            தெளியா வசுரர் போர்க்கடலே
        தெய்வப் பதியே முதற்கதியே
            திருச்செந் தூரிற் றிகழ்மதியே
    தாயா யென்னைக் காக்கவரும்
            தனியே பரம சற்குருவே
        தணிகா சலலாந் தலத்தமர்ந்த
            சைவ மணியே சண்முகனே.

உரை:

     தணிகைமலை யெனப்படும் பதியின்கண் எழுந்தருளும் சைவத் தலைமணியே, சண்முகப் பெருமானே, கல்லால மரத்தின் கீழ் இருந்து காய்க்காமலே தேன் நிறையக் கனிந்து அன்புற்று அருள் கரந்தொழுகும் சிவக்கனியின் உண்ணிறைந்த சுவையாகிய சிவஞானத் திருஅருவே, அடியார்களின் மனக்கவலையை அறிந்து போக்கும் கற்பகமே, உயிர்க்குள் அதனை யறியாமலே புக்கிருந்து எப்பொருளையும் இடையறவின்றி உணர்த்தி வரும் ஒருமைப் பொருளே, என் மனத்தின் உளதாகும் உவகையின் உருவே, பொறிகள் மேற் செல்லும் புலனைந்தையும் தங்கண் ஒடுக்கி நிறுத்தும் பெருமக்கட்கு உறவானவனே, குறைதலில்லாத கருணையாய பாற் கடலே, உண்மை தெளியும் அறிவில்லாத அசுரர்தொடுத்த போரை அழித்தவனே, தெய்வங்கட்குத் தலைவனே, முதற்றோற்றமே, திருச்செந்தூரில் விளங்குகின்ற முழு மதியமே, எனக்குத் தாயாய் அருள் புரிய எழுந்தருளும் தனிப் பரம மெய்ம்மைக் குருவே, அருள் புரிக, எ. று.      பூத்துக் காய்த்துக் கனியும் உலகியற் கனி போலின்றிச் சிவத்திடத்தே ஞான வருட் கனி காயாதே கனிந்து கல்லால மரத்தடியில் திருவருள் அறத்தேனைச் சொரிந்ததுஎன்பாராய்க் “காயாது அளியக் கனிந்து அன்பால் கல்லால் அடி நின்று அருளொழுகும் கனி” என்று கூறுகின்றார். சிவபெருமான் சீகண்ட முதல்வனாய்க் கல்லால மரத்தின் அடியில் தெற்கு நோக்கி யிருந்து ஞானப் பொருள் விளக்கம் பெறவந்த முனிவர் நால்வர்க்குச் சிவ தரும வாயிலாக அருள் நிறைந்த திருவுள்ளத்தோடு அற முரைத்தான் என்ற வரலாறு இதனுட் பொதியப் பெற்றுளது. “அணி பெறு வட மர நிழலினில் அமர்வொடு மடி யிணை யிடுவர்கள், பணிதர அறநெறி மறையொடும் அருளிய பரன்” (வீழிமிழலை) என ஞானசம்பந்தரும், “ஆலின் நீழல் அறம் பகர்ந்தார்” (பாசூர்) என நாவுக்கரசரும், “கோதின் மாதவர் சூழுவுடன் கேட்பக் கோல ஆல் நிழற் கீழறம் பகர, ஏதம் செய்தவ ரெய்திய வின்பம் யானும் கேட்டு நின்னிணை யடி யடைந்தேன்” (நின்றி) என நம்பியாரூரரும், “நன்றாக நால்வர்க்கு நான்மறையி னுட்பொருளை, அன்றாலின் கீழிருந்தங் கற முரைத்தான் காணேடீ” (சாழல்) என வாதவூரரும் கூறுவன காண்க. அடி பரவுபவர் மனக்கவலை நீங்குவர் என்பது உலகறிந்த செய்தியாதலால், “அடியர் மனக்கவலை யகற்றும் கற்பகமே” என வுரைக்கின்றார். “தடுமாறும் கவலை கெடுத்துக் கழலிணைகள் தந்தருளும் செயலைப் பரவி நாம் தெள்ளேணம் கொட்டாமோ” (தெள்ளே) எனத் திருவாசகமும் கூறுவது அறிக. கற்பகம் என்பது வேண்டுவார் வேண்டுவது நல்கும் தேவருலகத்துத் தெய்வமரம் என்பர்; எனினும் இச்சொல்லைக் கற்பு அகம் எனப் பிரித்துக் கல்வி சான்ற மனத்துறையும் கடவுளைக் குறிப்பதாகக் கொண்டு கற்றோர் கருத்தறிந்து முடித்தருளுவதால், “கவலை யகற்றும் கற்பகமே” என்கின்றார் என்றலும் உண்டு. “கற்றவர்க் கோர் கற்பகமாய் நின்றாய் நீயே” என்ற (ஐயாறு) திருத்தாண்டகம் இவ்வாறு நினைத்தற்கு இடம் தருகின்றது. உயிர்க்குயிராய் இருந்து உணரத் தகுவனவற்றை உணர்த்துவது இறைவனது அருட் டிறமாகலின், “உயிர்க்குள் ஒளித்திருந்து எவையும் ஓயாது உணர்த்தி யருளும் ஒன்றே” என வுரைக்கின்றார். “நானேதும் அறியாமே யென்னுள் வந்து நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்” (ஆனைக்கா) என்று நாவுக்கரசரும் உரைப்பது காண்க. உயிர்தோறும் உணர்வுருவாய் நின்று உண்மை யுணர்த்தும் பரம்பொருள் ஒன்றென்பதில் எவர்க்கும் கருத்து வேறுபாடில்லாமை பற்றி, “ஒன்றே” என்று கூறுகின்றார். உள்ளக் களிப்பு- உள்ளத்தே ஊறுகின்ற இன்பத்தாற் பிறக்கும் மயக்கம். இதனைத் “தீர்ப்பரிய ஆனந்தமால் ஏற்றும் அத்தன் பெருந் துறையான்” (வெண்பா) எனத் திருவாசகம் கூறுகிறது. ஐம்புலன்களையும் ஒடுக்கிப் புற வுலகத்தே செல்லும் அறிவை அகத்தே செலுத்தி அங்கே யெழுந்தருளும் அருட் சோதி யாண்டவனைக் கண்டவர்க்கு அவனே எல்லா மாதலால், “ஐம் பொறியும் ஒடுக்கும் பெரியோர்க்கு ஓர் உறவே” என மொழிகின்றார். ஓர் உறவு - ஒப்புயர்வற்ற உறவு; தன்னைக் காண்பரைத் தானேயாகக் கொள்ளும் தனி யுறவு. “தன்னைக் கண்ட என் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணமாகிய ஈசன்” (பொன்வண்) எனச் சேரமான் பெருமாளும், “தந்ததுன்றன்னைக் கொண்டதென்றன்னைச் சங்கரா ஆர்கொலோ சதுரர்” (கோயில்) என மணிவாசகரும் உரைப்பன காண்க. தேய்தல் - குறைதல். பாலுக்குப் பாலகன் ஒருவன் அழக் கண்டு கருணையாற் பாற்கடலை யளித்த பரமனாதலால், “கருணைப் பாற்கடலே” எனப் பராவுகின்றார். “பாலுக்குப் பாலகன் வேண்டி யழுதிடப் பாற்கட லீந்த பிரான்” (பல்லாண்டு) என்று சேந்தனார் பாடுவர். பாற்கடல் தந்தவனைப் பாற்கடல் என்கின்றார், பொன் தந்தான் வரக் கண்டவர் பொன் வருகிறது என்பது போல. போர்க் கடல் என்பது போர்க்கு அடல் எனப் பிரிந்து போர்க் கண் எதிர்ந்தாரை அட்டு (பொருது) வெல்பவன் எனப் பொருள்படும். தெய்வங்கட்குத் தலைவனும் சேனாதிபதியு மாதலால், “தெய்வப்பதி” எனச் சிறப்பிக்கின்றார். முருகனாய்த் தோன்றியவன் பிற தோற்றம் யாதும் இல்லாதவனாதல் பற்றி, “முதற் கதியே” என வுரைக்கின்றார்; முதல்வனான சிவனே முருகன் என்றற்கு இவ்வாறு கூறுகின்றார் எனினும் பொருந்தும். திருச் செந்தூரில் முருகனது யோகியர் துவாத சாந்தத்தில் காணும் அமுத சந்திரனது காட்சி எனப் பெரியோர் கூறுவதால், “திருச்செந்தூரில் திகழ் மதியே” எனத் தெரிவிக்கின்றார். தணிகையில் முருகன் ஞான சூரியன்; செந்தூரில் யோக சந்திரன் எனப் பெரியோர் கூறுவர் என ஆதமங்கலம் சந்திரசேகரன் பிள்ளை உரைப்பார். தான் பெற்ற குழந்தையின் பசி யுணர்ந்தூட்டும் தாய் போல யான் விழையும் கருத்துணர்ந்து தலை யளிக்கும் தண்ணளி யுடையவன் முருகன் என்றற்குத் “தாயாய்க் காக்க வரும் தனிப் பரம சற்குருவே” என வுரைக்கின்றார். தனியே என்றவிடத்து ஏகாரம், அசைநிலை. “தாயாய் முலையைத் தருவானே” (ஆனந்த) என்பது திருவாசகம். தனிப் பரம சற்குரு என்றது, ஒப்பற்ற மேலான மெய்யுணர்வு நல்கும் ஆசிரியன் என்ப துணர்த்தற்கு. பரம சற்குரு வானவன், “பாலரை யுணர்த்தும் மேலவர் போலக் கேட்போ ரளவைக் கோட்படு பொருளால்” (சங்கற்ப.) அருளுபவன் என உமாபதி சிவம் கூறுவது காண்க பலர் பரம குருவாவ ராயினும் மெய்ம்மை யுணர்ந்துரைக்கும் மேன்மை யுடையவன் என்பது புலப்படப் 'பரம குரு' வென்றொழியாது, “பரம சற்குரு” என்கிறார். பரமனுக்குச் சத்தாகிய ஞானப் பொருளை நல்கியதால் பரம சற்குருவாயினன் என்பது ஒரு பொருள். இனி, ஏகாரத்தை அசைநிலை யாக்காமல், “காக்க வரும் தனியே” எனக் கொண்டு, தனிப் பரம்பொருளே என உரைப்பினும் அமையும்.

     இதனால் கனியுட் கனியும், கவலை யகற்றும் கற்பகமும், எவையும் உணர்த்தும் ஒன்றும், உள்ளக் களிப்பும், பெரியோர்க் குறவும், கருணைப் பாற்கடலும், போர்க் கடலும், தெய்வப் பதியும், முதற் கதியும், திகழ் மதியும், சற்குருவும், சைவமணியும் ஆகிய சண்முகனே அருள் புரிக என வேண்டியவாறாம்.

     (2)