4715. பொய்யேஉரைக் கின்றஎன் சொல்லும் புனைந்துகொண்டாய்
மெய்யேதிரு அம்பலத் தாடல்செய் வித்தகனே
எய்யேன்இனி வெம்மலக் கூட்டில் இருந்தென்உள்ளம்
நையேன்சுத்த நல்லுடம் பெய்தினன் நானிலத்தே.
உரை: திருச்சிற்றம்பலத்தில் ஆடல் புரிகின்ற சிவபெருமானே! யான் பொய்யே உரைக்கின்றேனாயினும், நீ அதனை ஏற்றருளுகின்றாய்; இது உண்மை; தளரவும் மாட்டேன்; இந்த உலகத்தில் சிவம் பொலியும் நல்ல வுடம்பினை அடைந்தேனாதலால் இனி வெவ்விய மலம் நிறைந்த கூடு போன்ற இவ்வுடம்பில் இருந்து மனம் மெலிய மாட்டேன். எ.று.
வித்தகன் - சதுரப்பாடுடையன். புனைதல் - ஏற்றணிந்து கொள்ளல். எய்த்தல் - இளைத்தல்; தளர்தலுமாம். முடை நாறும் மல மூத்திரங்களை யுடையதாகலின், உடம்பை, “வெம்மலக் கூடு” என இழித்துரைக்கின்றார். நைதல் - மெலிதல்; வருந்துதலுமாம். குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் என ஐந்தாகப் பகுக்கப்படினும், வளமில்லாததாகலின், பாலையை நீக்கி “நானிலம்” என்பது வழக்காதலின் நிலப் பரப்பை “நானிலம்” என்று (10)
|