92
92. மெய்யின்பப் பேறு
அஃதாவது -
திருவருள் இன்பத்தைப் பெறுதல். ஈண்டு, உறங்குகின்றவரை எழுப்பி இன்புறுத்துவது போல உலகியல்
மாயையில் மயங்கி யிருந்த தம்மை அம்மயக்கத்திலிருந்து நீக்கித் திருவருள் ஞான வின்பத்தை
இறைவன் நல்கிய குறிப்புப் புலனாகிறது. தாம் பெற்ற தெளிவுக்கு நன்றி செய்வாராய்த் தமது உடல்
பொருள் ஆவி மூன்றையும் இறைவனுக்குக் கொடுக்கின்றார். இப்பாட்டுக்கள் பத்தும், “அன்றே என்றன்
ஆவியும் உடலும் உடைமையும் எல்லாமும், குன்றேனையாய் என்னை ஆட்கொண்ட போதே கொண்டிலையோ இன்றோ
ரிடையூறெனக் குண்டோ என்டோள் முக்கண் எம்மானே, நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ
இதற்கு நாயகமே” என்ற திருவாசகமும், “விற்றுக் கொள்வீர் ஒற்றி யல்லேன் விரும்பி யாட்பட்டேன்”
என்ற சுந்தரர் தேவாரமும் நினைவில் எழுந்து இன்பம் செய்கின்றன.
எண்சீர்க்
கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
4716. சத்தியம் சத்தியம் அருட்பெருஞ் சோதித்
தந்தைய ரேஎனைத் தாங்குகின் றீரே
உத்தமம் ஆகும்நுந் திருச்சமு கத்தென்
உடல்பொருள் ஆவியை உவப்புடன் அளித்தேன்
இத்தகை உலகிடை அவைக்கும்என் தனக்கும்
ஏதுஞ் சுதந்தரம் இல்லைஇங் கினிநீர்
எத்தகை ஆயினும் செய்துகொள் கிற்பீர்
எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
உரை: அருட்பெருஞ் சோதியாகிய தந்தையே! என்னைத் தாங்கி யருள்பவரே! உலகியல் மயக்கத்தில் உறங்கிக் கிடந்த என்னைத் தெளிவித்து ஞான வின்பம் தந்தீராகையால், உத்தமமாகிய உமது திருமுன்பு என்னுடைய உடலும் பொருளும் ஆவியுமாகிய மூன்றையும் மனமுவந்து கொடுத்துள்ளேன்; இது சத்தியம்; இந்த அழகிய வுலகத்தில் அவற்றிற்கும் எனக்கும் சிறிதளவும் இங்கே சுதந்திரம் இல்லை; இனி நீர் அவற்றை யாதும் செய்து கொள்வீராக. எ.று.
தந்தையர் எனப் பன்மையிற் கூறியது உயர்த்தற் பொருட்டு. தாங்குதல் - ஆதரித்தல். உத்தமம் - உயர்வுடையது. சமுகம் - முன்பிடம்; முகத் தெதிருள்ள சிறப்பிடம். குறை மனத்துடன் கொடுப்பதன்று என யாப்புறுத்தற்கு, “உவப்புடன் அளித்தேன்” எனவும், உண்மையெனத் தெளிவித்தற்குச் “சத்தியம் சத்தியம்” என அடுக்கி மொழிகின்றார். தகை - அழகு. அவைக்கும் - செய்யுளாதலின் சாரியை யின்றி உருபேற்றது. சுதந்திரம் - உரிமை. கொள்வீராக எனற்பாலது கொள்கிற்பீர் என வந்தது. பள்ளி யெழுப்புதல் - படுத்துறங்குபவரை எழுப்புதல். இங்கே உறக்க மென்பது உலகியற் போகங்களில் மூழ்கி உண்மை ஞானத்தை எண்ணா தொழிதல். இன்பம் - திருவருள் ஞானத்தாற் பெறலாகும் பேரின்பம். இனி வரும் பாட்டுக்களுக்கும் இதுவே கூறிக் கொள்க. (1)
|