4718. அகத்தொன்று புறத்தொன்று நினைத்ததிங் கில்லை
அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ ரேநீர்
சகத்தென்றும் எங்கணும் சாட்சியாய் நின்றீர்
தனிப்பெருந் தேவரீர் திருச்சமு கத்தே
உகத்தென துடல்பொருள் ஆவியை நுமக்கே
ஒருமையின் அளித்தனன் இருமையும் பெற்றேன்
இகத்தன்றிப் பரத்தினும் எனக்கோர்பற் றிலைகாண்
எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
உரை: அருட்பெருஞ் சோதியாகிய என்னை ஆண்டருளிய பெருமானே! நீவிர் இவ்வுலகத்தில் எப்பொழுதும் எவ்விடத்தும் காண்பவராய் இருக்கின்றீர்; என்னைப் பள்ளி யெழுப்பி மெய்யான இன்பம் தந்தீராதலால் தனித்த பெருந் தேவராகிய உம்முடைய திருமுன்பு மனமுவந்து உமக்கே ஒருமை யுள்ளத்தோடு உடல் பொருள் ஆவியாகிய மூன்றையும் கொடுத்து விட்டேன்; அதனால் இம்மை மறுமைகளில் பெறும் நலத்தையும் பெற்றுக் கொண்டேன்; இவ்வகையில் நான் அகத்தில் ஒன்றும் புறத்தில் ஒன்றும் நினைப்பதில்லை; இவ்வுலக வாழ்விலும் மேலுலக வாழ்விலும் எனக்குச் சிறிதும் பற்றில்லை. எ.று.
எனை பள்ளி எழுப்பி மெய்யின்பம் தந்தீராதலால் ஒருமையின் அளித்தனன் என இயையும். பள்ளி - உலகியல் மாயையாகிய படுக்கையில் கிடந்துறங்கும் பேருறக்கம். மெய்யின்பம் - மெய்யான ஞானத் திருவருள் இன்பம். உகந்தென்பது உகத்தென்று எதுகை நோக்கி வலித்தது. (3)
|