472. நாணு மயன்மா லிந்திரன்பொன்
னாட்டுப் புலவர் மனம்வேட்ட
நங்கை மார்கள் மங்கலப்பொன்
னாண்காத் தளித்த நாயகமே
சேணும் புவியும் பாதலமும்
தித்தித் தொழுகும் செந்தேனே
செஞ்சொற் சுவையே பொருட்சுவையே
சிவன்கைப் பொருளே செங்கழுநீர்
பூணும் தடந்தோட் பெருந்தகையே
பொய்ய ரறியாப் புண்ணியமே
போகம் கடந்த யோகியர்முப்
போகம் விளைக்கும் பொற்புலமே
தாணு னென் வுலகமெல்லாம்
தாங்கும் தலைமைத் தயாநிதியே
தணிகா சலமாம் தலத்தமர்ந்த
சைவ மணியே சண்முகனே.
உரை: தணிகைமலை யென்னும் பதியில் எழுந்தருளும் சைவமணியாகிய சண்முகப் பெருமானே, மூவரில் ஒருவன் எனக் கோயில்களில் இடம் பெறுதற்கு நாணப்படுகின்ற பிரமனும் திருமாலும் இந்திரனும் ஆகிய தேவர்களுடைய பொன்னுலகில் வாழும் தேவர்களை மணந்து கொண்ட மங்கையர்களின் அழகிய மங்கல நாணைக் காத்தருளிய தலைவனே, வானமும் நிலமும் பாதலமுமாகிய மூன்றுலகங்களிலும் இனிமையோடு பாய்ந் தொழுகும் சிவந்த தேனே, செஞ்சொற் பாட்டுக்களில் சுரக்கும் சொற்சுவையும் பொருட் சுவையுமானவனே, சிவ பெருமான் கையிலேந்தி மகிழும் புதல்வனாகிய பொருளே, செங்கழு நீர் மலர்களாலாகிய மாலையணியும் தோள்களையுடைய பெருந்தகையே, பொய்யுடையவர் அறியாத புண்ணியப் பொருளே, உலகியற் போகங்களைத் துறந்த சிவயோகியர் முக்கால இன்பங்களை விளைத்து நல்கும் பொன்னிற விளை நிலமே, தாணு மூர்த்தி யென்று சொல்லுமாறு உலகமெல்லா வற்றையும் தாங்கி யருளும் தலையான தயாநிதியே, எனக்கு அருளுக, எ. று.
முடி காணச் சென்ற முயற்சியில் தவறு செய்த கோயில் பெறும் தகுதி யிழந்துமை பற்றி ஏனை மால் உருத்திரன் முதலிய தேவர் முன் நாணுதல் இயல்பானமையால், “நாணும் பிரமன்” எனப்படுகின்றான். தேவர் நாட்டைப் பொன்னாடு என்றும், தேவர்களைப் புலவர் என்றும் வழங்குவது மரபாதலால், “பொன்னாட்டுப் புலவர்” என்று கூறுகின்றார். மண்புலத்தை நோக்கத் தேவர் நாடு உயர் புலமாதலால், தேவர்கட்குப் புலவர் என்பதும் பெயராயிற்று. சூரவன்மனைத் தலைவனாகக் கொண்டு அசுரர் விளைத்த போரில் தேவர்களை இறந்து படாமல் முருகன் காத்தமையால், தேவ மகளிர் விதவைகளாகாமைக் காக்கப் பட்டமை விளங்கப் “புலவர் மணம் வேட்ட நங்கை மார்கள் மங்கலப் பொன்னாண் காத்தளித்த நாயகமே” என்று போற்றுகின்றார். சேண் - விண்ணுலகம். மூவுலகுக்கும் சென்று அருள் வழங்குவது கொண்டு, “சேணும் புவியும் பாதலமும் தித்தித்தொழுகும் செந்தேனே” என்று பரவுகின்றார். தேனுக்குச் செந்நிறமும் தித்திக்கும் இயல்பும் உண்மை பற்றித் “தித்தித் தொழுகும் செந்தேனே” என்று சிறப்பிக்கின்றார். திரி சொல்லும் திசைச் சொல்லுமின்றிச் செந்தமிழ்ச் சொற்களைச் செஞ் சொல் என்பர். சொற்சுவை, “குணம் அலங்காரம் என இருவகைத்து”
எனவும், பொருட்சுவை, “காமம் நகை கருணை வீரம் உருத்திரம் அச்சம் இழிப்பு வியப்பு சாந்தம் என ஒன்பது வகைத்து” எனவும் பரிமேலழகர் (குறள். 420) உரைப்பர். கைப்பொருள் என்பது ஈண்டுக் கையிலேந்தி மகிழ்ந்து பாராட்டி யின்புறும் மக்களாகிய பொருள். செங்கழு நீர், ஆகு பெயராய்ச் செங்கழு நீர்ப் பூக்களால் தொடுக்கப்பட்ட மாலைக் காயிற்று. தடந்தோள் என்றவிடத்துத் தட என்பது பெருமை குறிக்கும் உரிச்சொல் என்க. தக்கார் தகவுடைமை நோக்கி அருள் வழங்கும் நலம் தோன்றப் “பெருந் தகையே” என்று புகழ்கின்றார். எல்லாப் பாவங்கட்கும் தாயாகிய பொய் யுடையார்க்குப் புண்ணியப் பொருள் தோன்றாதாகலின், “பொய்யர் அறியாப் புண்ணியமே” என்று புகல்கின்றார். பொய் இருள் மயமெனின் புண்ணியம் மெய்யாய் ஒளி மயமாம் எனப் பிரித்தறிக. உலகியற் போக நுகர்ச்சியைத் துறந்தாலன்றி யோகம் கை கூடாதாகலின், “போகம் கடந்த யோகியர்” எனவும், அவர்கட்குப் போகமாவது யோகத்தில் நீக்கமற நிறைந்து நின்று பெறும் இன்பமாகும்; அதனை முப்போதும் நுகர்தலால், “யோகியர் முப்போகம் விளைக்கும் பொற் புலமே” எனவும் புகல்கின்றார். வள்ளலாரது தொண்டை நாட்டில் முப்போகம் விளையும் நீர் நலமும் நில நலமும் உடைய புலன்கள் இல்லாமையால் அருமை பற்றி, “முப்போகம் விளைக்கும் பொன் புலம்” எனப் புகழ்கின்றார். தேவ தேவர்களும் அடி முடி காண முடியாத நெருப்புத் தூணாய் நின்றமை பற்றிச் சிவன் தாணு எனச் சான்றோர் கூறுவதுண்மையின், “தாணு என்ன உலகமெல்லாம் தாங்கும் தலைமைத் தயாநிதியே” என்று பரவுகின்றார். “தாணுவாய் நின்ற பரதத்துவன்” (வீழி) என ஞானசம்பந்தரும், “தாணுவே யழிந்தேன் நின்னினைந் துருகும் தன்மை” (எண்ணப்) என மணிவாசகரும் உரைப்பது காண்க. தயை யுடையார் எல்லாரினும் தலைவன் என்றற்குச் சிவனைத் “தலைமைத் தயாநிதி” என்று புகழ்கின்றார்.
இதனால், காத்தளித்த நாயகமெனவும், செந்தேன் எனவும், சொற் சுவை பொருட் சுவையே எனவும், சிவன் கைப்பொருளே எனவும், பெருந்தகையே எனவும், புண்ணியமே எனவும், பொற் புலமே எனவும், தயாநிதியே எனவும், சைவமணியே யெனவும், சண்முகனே எனவும் பரவி அருள் புரிக என முறையிட்டவாறாம். (3)
|