93. சிவபுண்ணியப் பேறு
அஃதாவது, தாம் சிவத்தொடு கலந்து செய்த நற்றவத்தை வியந்த தாம் பெற்ற நலங்களை எடுத்தோதுவது. சிவம் நினைந்து செய்த தவம் சிவபுண்ணியம் எனப்படுகின்றது. உலகவர் வாழ்வையும் தமது நிலையையும் ஒப்பு நோக்கி யுரைப்பது குறிக்கத் தக்கதாகும்.
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 4727. மாலிலே மயங்கி மண்ணிலே அநித்த
வாழ்விலே வரவிலே மலஞ்சார்
தோலிலே ஆசை வைத்துவீண் பொழுது
தொலைக்கின்றார் தொலைக்கநான் உனது
காலிலே ஆசை வைத்தனன் நீயும்
கனவினும் நனவினும் எனைநின்
பாலிலே வைத்தாய் எனக்கிது போதும்
பண்ணிய தவம்பலித் ததுவே.
உரை: உலகியல் செய்யும் மயக்கத்தில் மயக்கி மண்ணுலக நிலையா வாழ்வில் பிறப்பதிலும், மலம் கசியும் மகளிர் மேனியிலும் ஆசை கொண்டு பலர் பொழுதை வீணே கழிக்கின்றார்கள்; நானோ உனது திருவடி யடைதலில் ஆசை யுற்றேன்; நீயும் கனவு நினைவாகிய எப்போதும் என்னுள்ளம் நின்னிடத்தே ஒன்றி யிருக்கும் நிலையில் என்னை இருக்கச் செய்தருளினாய்; இதுவே எனக்குப் போதுமானது; நான் செய்த தவமும் பயன் பட்டதாம். எ.று.
மால் - உலகியல் வாழ்வு தரும் மயக்கம். மண்ணக வாழ்வு நிலை யுடையதன்றாயினும் அதனையே விரும்பி யுறைவது பற்றி, “மாலிலே மயங்கி” என வோதுகின்றார். அநிந்த வாழ்வு - நிலை யில்லாத வாழ்வு. வரவு - பிறப்பு; இறத்தலைப் போக்கு என்பராதலின், பிறப்பு - வரவு எனப்படுகிறது. வியர்வையும் அழுக்கும் பிறவும் வெளிப்படத் தோன்றவிருப்பது பற்றி, உடம்பை, “மலஞ்சார் தோல்” எனச் சொல்லுகின்றார். ஈண்டு மேனி யழகும் பொலிவும் தோலின்கண் விளங்குதலால், “தோல்” என்று எடுத்து மொழிகின்றார். தோல் என்றாராயினும், மகளிர் மேனியும் தோலின் பொலிவும் பிறர் மனத்தைக் கவரும் சிறப்புடைய தென அறிக. வீண் பொழுது என்றாராயினும் பொழுது வீண் தொலைக்கின்றார் என இயைக்கும். எல்லாவற்றாலும் மீளப் பெறலாகாமை பற்றிப் “பொழுது தொலைக்கின்றார்” என வருந்திக் கூறுகின்றார். கால் - திருவடி. மக்கள் தோலிலே ஆசை வைத்தாராக நான் உனது காலிலே ஆசை வைத்தனன் என்பது ஒரு நயவுரை. தவத்தின் குறிக்கோள் சிவப் பேறாதலால், “பண்ணிய தவம் பலித்தது” என மகிழ்கின்றார். பலித்தல் - பயன் தருதல். இதனையே மேல் வருமிடத்தும் உரைத்துக் கொள்க. (1)
|