பக்கம் எண் :

4733.

     துதிபெறும் அயனோ டரிஅரன் முதலோர்
          சூழ்ந்துசூழ்ந் திளைத்தொரு தங்கள்
     விதியைநொந் தின்னும் விழித்திருக் கின்றார்
          விழித்திருந் திடவும்நோ வாமே
     மதியிலேன் அருளால் சுத்தசன் மார்க்க
          மன்றிலே வயங்கிய தலைமைப்
     பதிபதம் பெற்றேன் எனக்கிது போதும்
          பண்ணிய தவம்பலித் ததுவே.

உரை:

     அன்பர்களால் போற்றிப் புகழப்படும் சிவன் திருமால் உருத்திரன் முதலியோர் பன்முறையும் சிந்தித்து மனம் சோர்ந்து தங்களுடைய விதிக்கு வருந்தி இப்பொழுதும் மருண்டிருக்கின்றார்கள்; அங்ஙனமிருக்க நல்லறிவில்லாத யான் ஒரு வருத்தமுமின்றிச் சிவனருளால் சுத்த சன்மார்க்க சபையிலே விளங்குகின்ற தலைமைப் பதவியைப் பெற்றுக் கொண்டேன்; இது எனக்குப் போதும்; நான் பண்ணிய தவமும் பயன் பட்டதாம். எ.று.

     சிவன் திருமால் பிரமன் ஆகியோர் வேதங்களால் போற்றப்படும் தேவர்களாதலால், “துதி பெறும் அயனோடு அரி அரன் முதலோர்” என்று சிறப்பிக்கின்றார். சூழ்தல் - சிந்தித்தல். பன்முறையும் சிந்தித்தமை புலப்பட, “சூழ்ந்து சூழ்ந்து” எனவும், மாட்டாராயினமை விளங்க, “இளைத்து” எனவும் இயம்புகின்றார். செய்வதறியாது மருண்டு நின்றனர் என்றற்கு, “விழித்திருக்கின்றார்” என்று கூறுகிறார். நோதல் - வருந்துதல். மதியிலேன் - நல்லறிவில்லாத யான். தலைமைப் பதிபதம் - தலைவனாய் இருக்கும் தலைமைப் பதம்.

     (7)