பக்கம் எண் :

94. சிவானந்தப் பற்று

    அஃதாவது, சிவஞானத்திற் பிறக்கும் இன்பத்தில் மிக்க விருப்புடைமை புலப்படப் பாடுவதாம்.

கட்டளைக் கலித்துறை

4737.

          வேதமும் வேதத்தின் அந்தமும் போற்ற விளங்கியநின்
          பாதமும் மாமுடி யும்கண்டு கொள்ளும் படிஎனக்கே
          போதமும் போதத் தருள்அமு தும்தந்த புண்ணியனே
          நாதமும் நாத முடியும் கடந்த நடத்தவனே.

உரை:

     நாத தத்துவத்துக்கும் அதற்கப்பாலதாகிய வியோம வெளியையும் கடந்த எல்லையில் திருநடனத்தைச் செய்யும் சிவபெருமானே! வேத வேதாந்த ஞானிகளாகிய வைதிகர்கள் போற்றித் துதிக்க விளங்குகின்ற நின்னுடைய திருவடியையும் திருமுடியையும் எளியேன் கண்டுகொண்டு மகிழும்படி எனக்குச் சிவஞானத்தையும் அதன் விளைவாகும் சிவஞானத் திருவருளமுதத்தையும் தந்த புண்ணியத்தை யுடையவனானாய். எ.று.

     நாதம் - நாத தத்துவம். மாயையின் காரியமாதலும் அதற்கு அப்பாலது மாயா மண்டலாதீத வியோம வெளியாதலாலும், இறைவன் திருநடனம் நிகழும் சிதாகாசம் அவற்றிற்கு மேலது என்று பெரியோர் கூறுதலால், “நாதமும் நாதமுடியும் கடந்த நடத்தவனே” என்று எடுத்தோதுகின்றார். வேதமும் வேதத்தின் அந்தமும் என்றது வேத பாரகர்களையும், வேதாந்த நூலறிவு சிறந்த வைதிக ஞானிகளையும் குறிக்கிறது. போதம் - ஞானம். போதத் தருளமுதம், ஞானத்தால் எய்தும் திருவருட் பேறு. நல்குவது புண்ணியச் செயலாதலால், “தந்த புண்ணியனே” எனப் புகழ்கின்றார்.

     (1)