பக்கம் எண் :

4738.

          வண்ணப்பொன் னம்பல வாழ்வேஎன் கண்ணினுள் மாமணியே
          கண்ணப்பொன் நீற்றொளி ஓங்கிய சோதிச் சுகப்பொருளே
          எண்ணப்ப யின்றஎன் எண்ணம் எலாம்முன்னர் ஈகஇதென்
          விண்ணப்பம் ஏற்று வருவாய்என் பால்விரைந் தேவிரைந்தே.

உரை:

     அழகிய பொன்னம்பலத்தில் எழுந்தருள்கின்ற பெருமானே! என் கண்ணில் மணியாகியவனே! பொற் கொடி போன்ற திருநீற்றின் ஒளி சிறந்த சோதியையுடைய சுகப்பொருளாகியவனே! எண்ணி யெண்ணிப் பழகிய என்னுடைய எண்ணங்கள் யாவற்றையும் எனக்கு முற்படத் தருள்க; இது எளியேனுடைய விண்ணப்பம்; இதனை ஏற்றருளி மிக விரைந்து என்பால் வருக. எ.று.

     பொன்னம்பலத்தில் எழுந்தருளி எப்போதும் காட்சி தருவது பற்றி, “பொன்னம்பல வாழ்வே” என்று போற்றுகின்றார். வாழ்பவனை வாழ்வு என்பது உபசார வழக்கு. சுண்ணம் - தூள். பொன்னிறத் தூளைச் “சுண்ணப் பொன்” என்று கூறுகிறார். இதனைப் பொற் சுண்ணம் என்றும் வழங்குவர். திருநீறு வெண்மையதாயினும், சிவனது பொன் மேனியிற் கிடந்து பொன்னின் நிறம் பெறுவது பற்றி, “சுண்ணப் பொன் நீற்றொளி” எனப் புகழ்கின்றார். சுகப் பொருள் - சுகத்தை நல்கும் பரம் பொருள், எண்ணப் பயிலுதல் - பலவாறு எண்ணாமல் ஒருமை நினைவுடன் எண்ணப் பழகுதல். எண்ணிய வெல்லாம் நல்குதற்கு “வருவாய்” என வேண்டுகின்றார். மிகுதி தோன்றி விரைந் தென்பது அடுக்கி நின்றது.

     (2)