4739. சிற்சபை அப்பனைக் கண்டுகொண் டேன்அருள் தெள்ளமுதம்
சற்சபை உள்ளம் தழைக்கஉண் டேன்உண்மை தான்அறிந்த
நற்சபைச் சித்திகள் எல்லாம்என் கைவசம் நண்ணப்பெற்றேன்
பொற்சபை ஓங்கப் புரிந்தாடு தற்குப் புகுந்தனனே.
உரை: சிற்சபையின்கண் உள்ள தந்தையாகிய கூத்தப் பெருமானைக் கண்டு கொண்டு அவனுடைய திருவருளாகிய தெளிந்த அமுதத்தைச் சன்மார்க்க சபையினர் மனம் தழைத்தோங்க அருந்தினேன்; உண்மை ஞானப் பொருளை உணர்ந்த நன்ஞானிகள் செய்யும் சித்திகள் எல்லாம் என் கைவசம் எய்தப் பெற்று அழகிய நற்சபைகள் மேலும் உயர்தற்குப் பொன்னம்பலத்தை விரும்பி நானும் சென்று ஆளுதற்குப் புகுந்துகொண்டேன். எ.று.
சிற்சபை - ஞானசபை. சற்சபை - சன்மார்க்க சங்கம். தாம் திருவருள் அமுதம் உண்டது சன்மார்க்க சங்கம் தழைத்தோங்க வேண்டும் என்பதற்காகவே என்பார், “சற்சபை உள்ளம் தழைக்க உண்டேன்” என வுரைக்கின்றார். மெய்யுணர்வு பெற்ற நன்ஞானிகளை உண்மை அறிந்த நற்சபை என்று உரைக்கின்றார். கைவசம் நண்ணப் பெற்றேன் - கைவரப் பெற்றேன். பொற்சபை - பொன்னம் பலம். (3)
|