பக்கம் எண் :

4741.

          தாயாகி என்உயிர்த் தந்தையும் ஆகிஎன் சற்குருவாய்த்
          தேயாப் பெரும்பதம் ஆகிஎன் சத்தியத் தெய்வமுமாய்
          வாயாரப் பாடும்நல் வாக்களித் தென்உளம் மன்னுகின்ற
          தூயா திருநட ராயாசிற் றம்பலச் சோதியனே.

உரை:

     தூயவனும் நடராசப் பெருமானுமாய்த் திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளுகின்ற சோதி உருவுடையவனாகிய சிவனே! என் உயிர்க்குத் தாயும் தந்தையுமாய், எனக்குச் சற்குருவாய், கெடாத சிவ பதத்திற்குரியதும் எனக்கு இம்மையான தெய்வமுமாய் விளங்குகின்ற உன்னை நான் வாயாரப் பாடுமாறு நல்ல வாக்களித்து என் உள்ளத்தில் நிலைபெறுகின்றாய். எ.று.

     சற்குரு - ஞான மருளும் குருபரன். என்றும் கெடாத பெரிய பதமாதலின், தேயாச் சிவபதம் “தேயாப் பெரும்பதம்” எனப்படுகிறது. நினைக்கின்ற உள்ளத்தில் நிலைபெறுதலால், “என் உளம் மன்னுகின்றாய்” என்று போற்றுகின்றார். மன்னுகின்றாய் என்பது மன்னுகின்ற என வந்தது. இது செய்யுள் விகாரம். நடராயன் - நடராசன்.

     (5)