4746. தீமைகள் யாவும் தொலைத்துவிட் டேன்இத் தினந்தொடங்கிச்
சேமநல் இன்பச் செயலே விளங்கமெய்ச் சித்திஎலாம்
காமமுற் றென்னைக் கலந்துகொண் டாடக் கருணைநடத்
தாமன்என் உள்ளமும் சாரவும் பெற்றனன் சத்தியமே.
உரை: பெருமானே! இந்நாள் தொடங்கிக் குற்றங்கள் யாவும் என்பால் உண்டாகாதபடிப் போக்கிக் கொண்டேன்; சேமமாகிய நலம் பயக்கும் இன்பச் செயல்களே எங்கும் விளங்குமாறு மெய்ம்மை அமைந்த சித்திகள் யாவும் என்பால் வந்து கலந்து கொள்ளவும் அருள் நடனம் புரிகின்ற ஞானச் சூரியனாகிய சிவபிரான் என் உள்ளத்தில் எழுந்தருளவும் பெற்று மகிழ்கின்றேன். எ.று.
துன்பம் விளைவிக்கும் தீயவை தீமை எனப்படுகிறது. ஷேமம் - சேமம் என வந்தது. கன்ம யோக சித்திகள் யாவும் அடங்க, “மெய் சித்திகள் எலாம்” என விளம்புகின்றார். சித்திகளை நான் நாடாதிருக்க அவை யாவும் என்னிடம் போந்து கலந்து கொண்டன என்றற்கு, “சித்தி யெலாம் காமமுற்று என்னைக் கலந்து கொண்டாட” என்று கூறுகின்றார். தாமன் - சூரியன்; ஈண்டு ஞானச் சூரியன் மேற்று. (10)
|