95. இறை எளிமையை வியத்தல்
அஃதாவது, இறைவனுடைய எளிமைத் தன்மையை நினைவிற் கொண்டு தோழரொடு பேசுவது போலத் தான் சிவமானது சொல்லித் தான் அருள் பெற்றதை வியந்துரைத்தலாம்.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 4747. படமாட்டேன் துயர்சிறிதும் படமாட்டேன் இனிநான்
பயப்படவும் மாட்டேன்நும் பதத்துணையே பிடித்தேன்
விடமாட்டேன் ஏமாந்து விடமாட்டேன் கண்டீர்
மெய்ம்மைஇது நும்மாணை விளம்பினன்நும் அடியேன்
கெடமாட்டேன் பிறர்மொழிகள் கேட்டிடவும் மாட்டேன்
கிளர்ஒளிஅம் பலத்தாடல் வளர்ஒளிநும் அல்லால்
நடமாட்டேன் என்உளத்தே நான்சாக மாட்டேன்
நல்லதிரு வருளாலே நான்தான்ஆ னேனே.
உரை: அருட்சோதி ஆண்டவனே! உனது நல்ல திருவருளால் நான் சிவமாயினேன்; ஆதலால் உலகியல் துன்பத்திற்கு ஆளாக மாட்டேன்; துன்பம் சிறிதாயினும் நான் பொறுக்க மாட்டேன்; இனி நான் எதற்கும் எவர்க்கும் அஞ்சவும் மாட்டேன்; ஏனெனில் உம்முடைய திருவடியையே இறுகப் பற்றிக்கொண்டேன்; அதனை இனிக் கைவிட மாட்டேன்; உலகியற் காட்சிகளால் ஏமாந்துவிட மாட்டேன்; இது சத்தியம்; நும் மேல் ஆணையாகச் சொன்னேன்; நும்முடைய அடியேனாதலால் நான் தீமை செய்து கெட மாட்டேன்; மற்றவர்கள் கூறுகின்ற சொற்களைக் கேட்கவும் மாட்டேன்; ஓங்குகின்ற ஒளி பொருந்திய அம்பலத்தின்கண் நடம் புரியும் பரஞ்சோதியாகிய உம்முடைய திருவடியையேயன்றி வேறு எதனையும் ஊன்ற விட மாட்டேன்; நான் வீணே சாகவும் மாட்டேன். எ.று.
துயர் - துன்பம். பதத் துணை - இரண்டாகிய திருவடி. உலகியல் மயக்கும் இயல்பினதாதலால் அது நல்கும் காட்சிகளால் மயங்கி அயர மாட்டேன் என்பாராய், “ஏமாந்து விட மாட்டேன்” என்று கூறுகின்றார். கண்டீர் - முன்னிலை அசை. மெய்ம்மை - சத்தியம். கெடுதற்குரிய ஏதுக்கள் வருவிக்கப் பட்டன. பரஞ்சோதியாகிய சிவ பரம்பொருளை “வளரொளி” என்று குறிக்கின்றார். சிவமல்லது வேறு பொருட்களை என் உள்ளமாகிய நிலத்தில் வேரூன்ற வளர்க்க மாட்டேன் என்பாராய், “வளரொளி நும் அல்லால் என்னுளத்தே நட மாட்டேன்” என்று சொல்லுகின்றார். தாம் திருவருள் ஞானத்தால் சிவமாம் தன்மை யெய்தினமை தோன்றத் “திருவருளாலே நான் தானானேன்” என இயம்புகின்றார். தானாதல் - சிவமாம் தன்மை எய்துதல். (1)
|