4748. சாகாத கல்வியிலே தலைகாட்டிக் கொடுத்தீர்
தடையறியாக் கால்காட்டித் தரம்பெறவும் அளித்தீர்
மாகாதல் உடையவனா மனங்கனிவித் தழியா
வான்அமுதும் மெய்ஞ்ஞான மருந்தும்உணப் புரிந்தீர்
போகாத புனலாலே சுத்தஉடம் பினராம்
புண்ணியரும் நண்ணரிய பொதுநிலையுந் தந்தீர்
நாகாதி பதிகளும் நின் றேத்தவளர்க் கின்றீர்
நடராஜ ரேநுமக்கு நான்எதுசெய் வேனே.
உரை: நடராசப் பெருமானே! சாகாமைக் கேதுவாகிய திருவருட் கல்வியிலே நான் தலையிடுதற்குரிய அருள் செய்தீர்; யாராலும் தடுக்க முடியாத திருவடிகளை எனக்குக் காட்டி ஞானத் தகுதி பெறவும் அருள் செய்தீர்; பேரன்புடையவனாக எனை மனத்தே இளகச் செய்து கெடாத தேவ வமுதும் உண்மை ஞானமாகிய அமிர்தத்தையும் யான் உண்டு மகிழச் செய்தீர்; சிவயோகாக்கினியால் சுத்த உடம்பினதாகிய சிவயோகிகளும் அடைதற் கரிதாகிய ஞான சபை இடத்தையும் எனக்குத் தந்து இந்திரர் முதலிய தேவர்களும் முன்னின்று போற்ற என்னை வளர்த்தருளுகின்றீர்; உமக்கு நான் யாது கைம்மாறு செய்வேன். எ.று.
தலை காட்டுதல் - கலந்து கொள்ளுதல். இறைவன் திருவடி மேவாத இடமில்லையாகலின், “தடை யறியாக் கால்” என்று கூறுகின்றார். தரம் - தகுதி. தேவர்கள் கடல் கடைந்து பெற்ற அமுதத்தை “வான் அமுதம்” என மொழிகின்றார். ஞான மருந்து - ஞானாமிர்தம். போகாத புனலாவது அக்கினி யென உபதேசப் பகுதி யுரைக்கின்றமையின் ஈண்டு யோகாக்கினி மேற்று. சுத்த வுடம்பு - பொன்னிற வுடம்பு. நாகாதிபர் - இந்திரன். இந்திரர் பலராதல் பற்றிப் பன்மை வாய்பாட்டிற் பகர்கின்றார். இப்பேரருட்குச் செய்யும் கைம்மாறு ஒன்றும் அறியேன் என்ற கருத்து விளங்க, “நான் எது செய்வேன்” என்று கூறுகின்றார். (2)
|