4753. கண்ணுடையீர் பெருங்கருணைக் கடலுடையீர் எனது
கணக்கறிந்தீர் வழக்கறிந்தீர் களித்துவந்தன் றுரைத்தீர்
எண்ணுடையார் எழுத்துடையார் எல்லாரும் போற்ற
என்னிதய மலர்மிசைநின் றெழுந்தருளி வாமப்
பெண்ணுடைய மனங்களிக்கப் பேருலகம் களிக்கப்
பெத்தருமுத் தருமகிழப் பத்தரெலாம் பரவ
விண்ணுடைய அருட்ஜோதி விளையாடல் புரிய
வேண்டும்என்றேன் என்பதன்முன் விரைந்திசைந்தீர் அதற்கே.
உரை: அருளொழுகும் கண்ணும் பெரிய கருணைக் கடலையும் உடைய பெருமானே! என்னுடைய அறிவளவையும் செயலளவையும் கண்டு மனமுவந்து அன்றொருநாள் சொல்லி அருளினீர்; எண்ணும் எழுத்தும் வல்லவர் எல்லாரும் போற்றவும் என்னுடைய இதயத் தாமரையின்கண் எழுந்தருளி இடப்பாகத்திருக்கும் உமாதேவியாகிய பெண்மகள் கண்டு மனம் மகிழவும், பெரிய உலகத்தார் எல்லாரும் மகிழ்ச்சி கொள்ளவும், குடும்ப வாழ்வினரும் முத்திக்கு முயலும் ஞானிகளும் களிக்கவும், பத்தர்கள் எல்லாரும் நாளும் பரவி வாழ்த்தவும் விண்ணுலகில் நிகழ்த்தும் அருட்சோதி விளையாட்டை மண்ணகத்தும் செய்யவேண்டும் என்று வேண்டினேன்; என் வேண்டுகோள் முடிவதற்கு முன்னமே அதனைச் செய்தற்கு விரைந்து உடன்பட்டீர்; இதற்கு நான் என்ன கைம்மாறு செய்வேன். எ.று.
கண் - அருளொளி விளங்கும் கண். கணக்கு - அறிவெல்லை. வழக்கு - செயல்வகை. கற்றவர் எல்லாரையும் கண்ணுடையார் எழுத்துடையார் எனச் சிறப்பிக்கின்றார். இதயமலர் - இதயத் தாமரை. வாமப் பெண் - இடப் பாகத்திலுள்ள உமாதேவி. உலகம் மகிழ்வது கண்டு மனம் களிக்கும் மாண்புடையவனாதலின், “வாமப் பெண்ணுடைய மனங் களிக்கப் பேருலகம் களிக்க” என்று கூறுகின்றார். பெத்தர் - உலகியல் பாசங்களால் சூழப் பெற்றவர். முத்தர் - பாசங்கள் நீங்கி முத்தி பெறுதற்கு முயல்பவர். ஞானாகாசத்தில் நடத்துகின்ற திருநடனத்தை மண்ணுலகிலும் புரிந்து காட்டல் வேண்டும் என்று வேண்டினேன் என்பாராய், “நின்னுடைய அருட் சோதி விளையாடல் புரியவேண்டும் என்றேன்” என்று உரைக்கின்றார். அதற்கு, விளையாடல் புரிதற்கு. (7)
|