476. வன்பிற் பொதிந்த மனத்தினர்பால்
வருந்தி யுழல்வே னல்லாலுன்
மலர்த்தா ணினையே னென்னேயிம்
மதியி லேனு முய்வேனோ
அன்பிற் கிரங்கி விடமுண்டோ
னருமை மகனே ஆரமுதே
அகிலம் படைத்தோன் காத்தோனின்
றழித்தோ னேத்த வளித்தோனே
துன்பிற் கிடனாம் வன்பிறப்பைத்
தொலைக்குந் துணையே சுகோதயமே
தோகை மயின்மேற் றோன்றுபெருஞ்
சுடரா விடராற் சோர்வுற்றே
தன்பிற் படுமச் சுரராவி
தரிக்க வேலைத் தரித்தோனே
தணிகா சலமாந் தலத்தமர்ந்த
சைவ மணியே சண்முகனே.
உரை: தணிகை மலையாகிய திருப்பதியில் எழுந்தருளும் சைவத் தலைமணியான சண்முகப் பெருமானே, வன்புடைய நினைவுகளில் புதைந்திருக்கும் மனமுடைய கீழ் மக்களுடன் கூடி வருந்தி யலையும் செயலை யுடையனாவ தன்றி உன்னுடைய பூப் போன்ற திருவடியை நினைந்திலேன்; என்னே யான் இருந்தவாறு! அறிவில்லாத யான் உய்தி பெறுவேனோ? அமரர்கள் கொண்ட அன்புக்காக மனம் இரங்கிக் கடல் விடமுண்ட சிவபெருமானுக்கு அருமையான மகனே, அரிய ஞானாமிர்தமே, எல்லா வுலகங்களையும் படைத்த பிரமனும், காத்தலைச் செய்யும் திருமாலும், தான் அழிவின்றி நின்று அவ்வுலகனைத்தையும் அழிக்கும் உருத்திரனும் வணங்கித் துதிக்க அவர்கட்கு அருள் புரிபவனே, துன்பத்துக் கிடமாகிய வலிய பிறவிச் சூழலைக் கெடுத்து நீக்கும் துணைவனே, இன்ப வாழ்வின் தோற்றமே, தோகையை யுடைய மயில் மேல் எழுந்தருளிக் காட்சி வழங்கும் பேரொளியே, துயர் வகைகளால்.
தளர்ந்து தனக்குப் பின்னின்று வழிபடும் அந்தத் தேவர்களின் உயிர் நிலை பெறல் வேண்டிக் கையில் வேலேந்துபவனே, வணக்கம், எ. று.
வன்பு - அன்புக்கு மாறான வுணர்ச்சிகள். அவை நிறைந்த மனமுடையவர் எத்தகைய வன்செயல்களையும் செய்வர் என அறிக. அவரொடு கூடித் திரிவோர் அரக்கப் பண்பினராவதால், “வன்பிற் பொதிந்த மனத்தினர் பால் வருந்தி யுழல்வேன்” என்றும், அவர்களோடு சேர்ந்ததால் அருளுருவினனாது நினது திருவடியை நினையேனாயினேன் என்பார், “உன் மலர்த்தாள் நினையேன்” என்றும் இயம்புகின்றார். அச்செயல் பத்தி நெறிக்குப் பொருந்தாமை கண்டு வருந்துகின்றமை புலப்பட, “என்னே” எனவும், இதனால் உய்தி பெறல் கூடாமை நோக்கி, “இம்மதியிலேனும் உய்வேனோ” எனவும் உரைக்கின்றார். தேவர்பால் உண்டான அன்பு மிகுதி காரணமாகவே கடல் நஞ்சினைச் சிவபிரான் உண்டருளினான் என்றற்கு, “அன்பிற் கிரங்கி விட முண்டோன்” என்றும், வாழையின் கன்றும் கனி யுதவும் என்பது போல அருளாளன் மகனாதற் கேற்ப நீயும் தேவர்கட் காதரவாய் நின்று துன்பம் செய்யும் அசுரர் பகையைப் போக்கி அருளமுதம் வழங்கினாய் என்பாராய், “அருமை மகனே ஆரமுதே” என்றும் உரைக்கின்றார். பிரமன் முதலிய மூவரும் தத்தமக்குரிய தொழிலைச் செய்தற் கருள் புரியும் சிவமே முருகன் என்பது பற்றி, “அகிலம் படைத்தோன் காத்தோன் நின்று அழித்தோன் ஏத்த அளித்தோன்” என்று விளம்புகிறார். “பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்” (மணிமே) எனப் பிறரும் கூறுதலால், “துன்பிற் கிடனாம் வன்பிறப்பு” எனவும், விடாது தொடரும் வீறுடைமை பற்றி, “வன் பிறப்பு” எனவும், பிறவி யறுத்தற்குரியவற்றை நாம் செய்தல் வேண்டும்; திகைக்கும் போது தான் அவன் துணை புரிவானாதலின், “வன்பிறப்பைத் தொலைக்கும் துணையே” எனவும் இசைக்கின்றார். இக்கருத்துத் தோன்றவே “தாமே தமக்குச் சுற்றமும் தாமே தமக்கு விதி வகையும் . . . . அவன் குறிப்பே குறிக்கொண்டு போமா றமையின் பொய்நீக்கிப் புயங்க னாள்வான் பொன்னடிக்கே” (யாத்திரை) என மணிவாசகனார் அறிவுறுத்துவதை யுணர்க. அவனது துணையே நமக்குப் பேரின்ப வாழ்வுக்குத் தோற்றமாதல் விளங்கச் “சுகோதயம்” என்று சொல்லுகிறார். மயில் மேற் பேரொளி திகழக் காட்சிப் படுதலால், “மயில் மேல் தோன்றும் பெருஞ் சுடரே” என்கின்றார். பிற்படும் சுரர் - இரந்து பின்னிற்கும் தேவர். பின்னிற்றல் வழிபாட்டு முறைகளில் ஒன்று. புறநானூறு இதனைப் பிற்றைநிலை எனக் கூறுகிறது. “பிற்றை நிலை முனியாது கற்றல் நன்று” என்று குறிப்பது காண்க. தரித்தல் - தாங்குதல்; ஈண்டு ஏந்துதற் பொருளது.
இதனால், தணிகாசலத் தமர்ந்த சைவமணியே, சண்முகப் பெருமானே, விட முண்டோன் அருமை மகனே, ஆரமுதே, படைத்தோன் முதலியோர் ஏத்த அளித்தவனே, பிறப்பைத் தொலைக்கும் துணையே, சுகோதயமே, பெருஞ் சுடரே, வேலைத் தரித்தவனே, மதியிலேனாகிய யானும் உய்வேனோ என விண்ணப்பித்தவாறாம். (7)
|