477. மாலு மயனு முருத்திரனும்
வானத் தவரு மானிடரும்
மாவும் புள்ளு மூர்வனவும்
மலையும் கடலு மற்றவையும்
ஆலுங் கதியும் சதகோடி
அண்டப் பரப்பும் தானாக
அன்றோர் வடிவ மேருவிற்கொண்
டருளும் தூய வற்புதமே
வேலு மயிலும் கொண்டுருவாய்
விளையாட் டியற்றும் வித்தகமே
வேதப் பொருளே மதிச்சடைசேர்
விமலன் தனக்கோர் மெய்ப்பொருளே
சாலும் சுகுணத் திருமலையே
தவத்தோர் புகழும் தற்பரனே
தணிகா சலமாம் தலத்தமர்ந்த
சைவ மணியே சண்முகனே.
உரை: தணிகை மலையாகிய திருப்பதியில் எழுந்தருளும் சைவத் தலைமை மணியே, சண்முகப் பெருமானே, திருமாலும் பிரமனும் உருத்திரனும் வானுலகத்துத் தேவர்களும் மானிடரான மக்களும் விலங்குகளும் பறவைகளும் ஊர்பவைகளும் மலையும் கடலும் பிறவுமாகிய பிறவிகளும் வாழும் நூறு கோடி அண்டப் பரப்புக்கள் அனைத்தும் தானேயாய்த் தன்னில் தோன்ற மிக்க இளையனாய் விளையாடிய அந்நாளில் மேரு மலையில் ஒரு விசுவ வடிவ மெடுத்துக் காட்டிய தூய அற்புதப் பொருளே, வேலும் மயிலும் கொண்டு சகள வடிவுற்று விளையாடி யருளிய வித்தகனே, வேதப் பொருளாகியவனே, பிறைமதியைச் சடையில் அணிந்த விமலனாகிய சிவனுக்கு மெய்ப் பொருளை யுணர்த்திய பெருமானே, நற்குணம் சான்ற அழகிய மலையே, தவம்புரியும் முனிவர்கள் புகழும் தற்பரனே, வணக்கம், எ. று.
மால் - திருமால். குணம் குறி கடந்த உருத்திரன் சிவனாதலால், ஈண்டு உருத்திரன் என்றது, அயன் மால்களோடு வைத்து எண்ணும் குணிருத்திரனை என்று அறிக. ஆலுதல் - பெருகி வாழ்தல். கதி - பிறப்பு வகை. பிறரை அச்சுறுத்தற்கோ, வியப்பில் ஆழ்த்துதற்கோ எடுத்த விசுவ ரூபம் அன்றென்றற்குத் “தூய அற்புதமே” என வுரைக்கின்றார். இந்த நிகழ்ச்சியை, “முன்னம் ஒரு சேயென நினைந்து பொருதீர்; நமது மொய்ம்பும் உயர்வும் இன்னும் உணரும்படி தெரித்துமென ஓருருவம் எய்தினனரோ” எனவும், “எண்டிசையும் ஈரெழு திறத்துலகும் எண்கிரியு மேழு கடலும், தெண்டிரையும் நேரிவரையும் பிறவும் வேறு திரிபாகி யுள சீர், அண்ட நிரையானவும் அனைத்துயிரும் எப்பொருளுமாகி யயனும், விண்டும் அரனும் செறிய ஓருருவு கொண்டனன் விறற்குமரனே” எனவும் கந்தபுராணம் (விளையாட்டு) கூறுவது காண்க. விசுவமாயும் விசுவாதித மாயும் உள்ள பரம்பொருள் தேவரும் மக்களும் காணும் உருவிலும் வருவது, பெருங் கடனீர் மண்ணீரும் உண்ணீருமாய்ப் பயன்படுவது போல்வதாகலின், “வேலும் மயிலும் கொண்டுருவாய் விளையாட் டியற்றும் வித்தகமே” என விளம்புகிறார். வித்தகம் - சதுரப்பாடு. வேதங்களின் உள்ளீடாகிய பொருள் பரம் பொருளாதல் பற்றி, “வேதப் பொருள்” என்று கூறுகின்றார். விமலன் - மலமில்லாதவன்; ஈண்டுச் சிவபிரான் மேற்று. வேத மோதுவோர் தொடக்கத்திற் கூறும் பிரணவத்துக்குரிய பொருளைச் சிவனுக்கு ஞானாசிரியனாய் இருந்து மெய்ப்பொருள் உரைத்த வரலாறு கொண்டு, “விமலன் தனக்கோர் மெய்ப்பொருளே” என்கின்றார். மய்ப்பொருளாய் “இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டினமை” பற்றி, இவ்வாறு கூறினார் எனினும் அமையும். நற்குணக் குன்றென்பதைச் “சுகுணத் திருமலை” என்று சொல்லுகின்றார். சலியா நிலைமை பற்றிக் குணத்தைக் குன்றாக உருவகம் செய்வது மரபாயிற்று. திருவள்ளுவரும், “குணமென்னும் குன்றேறி நின்றார்” எனப் பெரியோர்களைச் சிறப்பிப்பர். தற்பரன் - தானே தனி முதலாகிய மேலோன்.
இதனால், தணிகாசலச் சைவமணியே, சண்முகனே, அண்டப் பரப்பும் தானாகக் கொண்டருளும் தூய அற்புதமே, விளையாட்டியற்றும் வித்தகமே, மெய்ப் பொருளே, சுகுணத் திருமலையே, தற்பரனே என முறையிட்டவாறாம். (8)
|