பக்கம் எண் :

4778.

          கடுத்த மனத்தை அடக்கிஒரு கணமும் இருக்க மாட்டாதே
          படுத்த சிறியேன் குற்றமெலாம் பொறுத்தென் அறிவைப் பலநாளும்
          தடுத்த தடையைத் தவிர்த்தென்றும் சாகா நலஞ்செய் தனிஅமுதம்
          கொடுத்த குருவே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.

உரை:

     எதனையும் ஐயுறும் இயல்புடைய மனதை அடக்கி ஒருகண நேரமும் அதன் இயல்பிலே அடங்கியிருக்க விடாது கெடுத்த சிறியவனாகிய என் குற்றம் எல்லாவற்றையும் பொறுத்தருளி என்னுடைய அறிவைப் பலகாலமாகத் தடுத்து நின்ற அஞ்ஞானமாகிய தடையைப் போக்கி எக்காலத்தும் சாவாமையாகிய நலத்தைச் செய்கின்ற ஒப்பற்ற அருளமுதத்தை எனக்குக் கொடுத்தருளிய குருபரனாகிய உனக்கு நான் யாது கைம்மாறு செய்வேன். எ.று.

     கடுத்த - ஐயப் பொருளதாகிய கடி என்னும் உரிச்சொல் அடியாகப் பிறந்த வினை. எதனையும் ஐயுற்றுத் தெளிவதே மனத்துக்கு இயல்பாதலின், “கடுத்த மனம்” என்று கூறுகின்றார். எக்காலத்தும் ஐயுறும் இயல்புடைய மனத்தை அவ்வியல்பிலே இருக்காமல் உரைத்த உண்மையை உரைத்தாங்கு உணரும் இயல்புடையதாக மாற்றினமை புலப்பட, “ஒருகணமும் இருக்க மாட்டாதே படுத்த சிறியேன்” என்று தெரிவிக்கின்றார். இது செயற்கரிய பெரிய செயலாயினும் தமது சிறுமை புலப்படுத்தற்கு, “சிறியேன்” என்று செப்புகின்றார். பிறந்த நாள்தொட்டு நீங்காத தன்மை யுடையதாகலின் அஞ்ஞானத்தை, “அறிவைப் பலநாளும் தடுத்த தடை” என்று ஓதுகின்றார். சாகா நலம் திருவருள் ஞான சித்தியால் எய்துவ தென்பது தோன்ற, “சாகா நலஞ் செய் தனியமுதம் கொடுத்த குருவே” என்று கூறுகின்றார். திருவருள் ஞானத்தை இறைவன் குருபரனாய் எழுந்தருளி நல்கினான் என்பது விளங்க உரைக்கின்றாராதலால், “தனிஅமுதம் கொடுத்த குருவே” என்று கூறுகின்றார்.

     (2)