பக்கம் எண் :

99. திருவருட் கொடை

    அஃதாவது, ஐந்தொழில் செய்யும் திறமும், அதற்கேற்ற ஆற்றலை நல்கும் திருவருள் ஞான வமுதமும், அந்த ஞான ஒளி குன்றாதபடிப் பாதுகாக்கும் அடியவர் கூட்டமும் இறைவன் தமக்கு அருளிய நலத்தை எடுத்தோதுவதாம்.

கொச்சகக் கலிப்பா

4797.

          சிருட்டிமுதல் ஐந்தொழில்நான் செய்யஎனக் கருள்புரிந்தாய்
          பொருட்டிகழ்நின் பெருங்கருணைப் புனிதஅமு துவந்தளித்தாய்
          தெருட்டிகழ்நின் அடியவர்தம் திருச்சபையின் நடுஇருத்தித்
          தெருட்டிஎனை வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.

உரை:

     ஞான சபையில் திருக்கூத்து ஆடுகின்ற பெருமானே! படைத்தல் முதலிய தொழில்கள் ஐந்தினையும் யான் செய்யுமாறு எனக்கு அருள் புரிந்தாய்; சிறந்த பொருளாக விளங்குகின்ற நின்னுடைய பெரிய கருணையாகிய தூய அமுதத்தை விருப்புடன் எனக்கு நீ அளித்தருளினாய்; ஞானத் தெளிவுடைய நின்னுடைய அடியவர்களின் திருக்கூட்டத்தின் நடுவே என்னை இருக்க வைத்து என்னையும் ஞானத் தெளிவு பெறச் செய்து என்னை வளர்த்து அருளுகின்றாய்; நின்னுடைய அருட்கொடை இருந்தவாறு என்னே. எ.று.

     சிவமாந் தன்மை எய்திய வழிச் சிவத்துக்குரிய தொழில் ஐந்தையும் சிவமாகிய ஆன்மா செய்ய வல்லதாம் என்ற கருத்துப்பற்றி, “சிருட்டி முதல் ஐந்தொழில் நான் செய்ய எனக்கு அருள் புரிந்தாய்” என்று சொல்லுகின்றார். இனி வருமிடங்களிலும் இதுவே கருத்தாக உரைத்துக் கொள்க. நிலையாய பொருட்கள் அனைத்திலும் இறைவன் திருவருளிலும் சிறப்புடையது வேறின்மையால், “பொருள் திகழ் நின் பெருங் கருணைப் புனித அமுது” என்று புகல்கின்றார். சிவஞானிகளாகிய அடியவர்களைத் “தெருள் திகழ் நின் அடியவர்” என்று செப்புகின்றார். சிவஞானத்தைத் தந்து சிறப்பித்தலால், “தெருட்டி எனை வளர்க்கின்றாய்” என்று உரைக்கின்றார். என்னே நின் அருட் கொடை இருந்தவாறு என்பது குறிப்பெச்சம். இதனையும் உரைதோறும் கூறிக் கொள்க.

     (1)