4799. அயன்முதலோர் ஐவர்செயும் தொழில்எனக்கே அளித்திட்டாய்
உயர்வுறுபேர் அருட்சோதித் திருவமுதம் உவந்தளித்தாய்
மயர்வறுநின் அடியவர்தம் சபைநடுவே வைத்தருளிச்
செயமுறவே வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
உரை: ஞான சபையில் நடிக்கின்ற பெருமானே! பிரமன் முதலிய தேவர்கள் செய்யும் தொழில் ஐந்தையும் எனக்கும் தொழிலாக அளித்துள்ளாய்; உயர்வு மிகுந்த பேரருளாகிய சோதி உருவாகிய அமுதத்தை விருப்புடன் எனக்கு அளித்துள்ளாய்; மயக்கமில்லாத உன்னுடைய அடியவர்கள் கூடிய சபை நடுவில் என்னை இருக்க வைத்துச் சிறப்புற வளர்த்து அருளுகின்றாய்; நின் அருட் கொடை இருந்தவாறு என்னே. எ.று.
பிரமன், திருமால், உருத்திரன், ஈசன், மகேசன் ஆகிய ஐவரையும் “அயன் முதல் ஓர் ஐவர்” எனக் குறிக்கின்றார். அயன் முதலியோர் பெற்ற அருளினும் உயர்வு மிக்கது என்று புலப்படுத்தற்கு, “உயர்வுறு பேரருட் சோதி” என்று புகழ்கின்றார். மயக்க உணர்வும் சிவஞானிகளாகிய அடியவர்களிடம் இல்லாமையால், “மயர்வறு நின் அடியவர்” என்று பாராட்டுகின்றார். செயமுற வளர்த்தல் - சிறப்பு மிகுவித்தல். (3)
|