45. செவி யறிவுறுத்தல்
அஃதாவது செவி வாயிலாக நெஞ்சிற்
பதியுமாறு அறிவுரை வழங்குவது, இதனைச் செவியறிவுறூஉ எனவும்
செவியுறை எனவும் வழங்குவதுண்டு. செவியுறைதானே,
பொங்குதலின்றிப் புரையோர் நாப்பண், அவிதல் கடன் என
அறிவுறுத் தன்றே என்று தொல்காப்பியர்
கூறுகின்றார். ஆயினும், இங்கே அவ்வாறின்றி நெஞ்சுக்கு
அறிவுறுத்தும் வகையில் பாட்டுக்கள் அமைந்துள்ளன. நெஞ்சு
கேட்டற்குக் கருவி செவியாதல் பற்றிச்
செவியறிவுறுத்தல் என்று பெயர் அமைத்துள்ளனர் போலும்.
நெஞ்சறி வுறுத்தற் பொருளில் வேறு பாட்டுக்கள் இருத்தலை
யெண்ணி, அவற்றின் வேறுபடுத்தற்குச் செவியுறை யென்றோ
செயறிவுறூஉ என்றோ கூறாமல், செவியறிவுறுத்தல் எனப்
பெயர் குறித்துள்ளனர். இத் தலைப்புப் பெயர்கள் வள்ளற்
பெருமானாலோ பதிப்பாசிரியர்களாலோ யாவரால் இடம்
பெற்றன என்பது திட்டமாகத் தெரியவில்லை.
பதிப்பித்தவர்கள் அதைப் பற்றி விளக்கம் தரவில்லை.
இதன்கண் உலகியல் வாழ்க்கைத் துன்பங்களையும் வினை
வகையால் எய்தும் துன்பங்களையும் தீய கருத்துடைய
மக்களால் உண்டாகும் துன்பங்களையும் பிறவற்றையும்
எடுத்தோதி இவற்றின் நீங்கி நற்கதி பெறுதற்குச்
சிற்பரகுக, சண்முக சிவசண்முக என்று நீறிட்டு வழிபடுக என
நெஞ்சிற்கு அறிவுறுக்கின்றார்.
கலி விருத்தம்
480. உலகியற் சுடுசுரத் துழன்று நாடொறும்
அலகில்வெந் துயர்கிளைத் தழுங்கு நெஞ்சமே
இலகுசிற் பரகுக என்று நீறிடில்
கலகமி லின்பமாம் கதிகி டைக்குமே.
உரை: உலகியல் எனப்படும் வெம்புகின்ற சுரத்தின்கண் அலைந்து அளவில்லாத வெவ்விய துன்பம் பெருகி வருந்துகின்ற நெஞ்சமே, விளங்குகின்ற ஞானத்தால் மேலான குகனே என நினைந்து வாயால் உரைத்துத் திருநீற்றை அணிந்து கொள்வாயாயின், சலிப்பில்லாத இன்ப நிலையமாகிய சிவகதி கிடைக்கும் என அறிக, எ. று.
உலகியற் சுடு சுரம் - உலகியல் வாழ்வாகிய வெயில் மிக்குச் சுடுகின்ற பாலை நிலம். உழலுதல், பாலையில் நீரும் நிழலும் தேடி யலைவது போல வாழ்வில் அமைதியும் இன்பமும் நாடி மனம் அலைவது. அமைதியை வடமொழியிற் சாந்தி என மொழிவர். அலகு - அளவு. “அலகில் சோதியன்” (பெரியபு) என்பது காண்க. நினைக்கின் நெஞ்சமும் சொல்லின் நாவும் வருந்தக் கூடிய துன்பத்தை, “அலகில் வெந்துயர்” என இயம்புகின்றார். கிளைத்தல் - மேன்மேலும் பெருகுதல். அழுங்குதல் - வருந்துதல். சிற்பரன் - அறிவால் மேம்பட்டவன். ஞானத்தில் மேலான
ஓங்காரமாகிய பிரணவம் பற்றிய ஞானத்தால் சிவபிரானுக்கும் உணர்த்து மளவு மேன்மை பெற்றவன் என்பது விளங்கச் “சிற்பரகுக” என்று நினைந்தும் ஓதியும் திருநீறணிக என மொழிகின்றார். அதனால் விளையும் பயன் இது வென்றற்குக் “கலகமி லின்பமாம் கதி கிடைக்கும்” என்று கூறுகிறார். கலக்கம், கலகம் என வந்தது. நிலையின்றிச் சலித்தல் இல்லாத இன்பம், “கலகமில் இன்ப” மெனப்படுகிறது. இத்தகைய இன்ப நுகர்ச்சிக்கு ஏற்பது சிவலோகப் பிறப்பென்பார், “சிவ கதி” என்று இசைக்கின்றார். கதி - பிறப்பு; பிறப்பிடம் என்றுமாம்.
இதனால், சிற்பரகுக என நீறணிந்தால் இன்பக் கதி கிடைக்கும் என அறிவுறுத்தவாறாம். (1)
|