பக்கம் எண் :

4801.

          முத்தொழிலோ ஐந்தொழிலும் முன்னிமகிழ்ந் தெனக்களித்தாய்
          புத்தமுதம் உண்ணுவித்தோர் பொன்னணிஎன் கரத்தணிந்தாய்
          சித்தர்எனும் நின்னடியார் திருச்சபையில் நடுஇருத்திச்
          சித்துருவின் வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.

உரை:

     ஞான சபையில் நடிக்கின்ற பெருமானே! முத்தொழில் மாத்திரமன்று ஐந்து தொழிலையும் மனத்திற் கொண்டு மகிழ்ச்சியுடன் நான் செய்ய எனக்கு அளித்துள்ளாய்; புதிதாய ஞானாமிர்தத்தையும் யான் உண்ணத் தந்து பொன்னாலாகிய காப்பொன்றையும் என் கையில் அணிந்து சித்தர்களாகிய உன்னுடைய அடியார் கூட்டத்தின் நடுவே என்னை இருக்க வைத்து என்னையும் ஞான உருவினனாகவே வளர்த்தருளுகின்றாய்; நின் அருட் கொடை இருந்தவாறு என்னே. எ.று.

     படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்றும் ஐந்தொழில் எனப்படும். அருளல், மறைத்தல் இரண்டும் சேர்ந்தவிடத்து ஐந்தொழிலாகும். முன்னுதல் - நினைத்தல். உண்பித்து என்பது உண்ணுவித்து என வந்தது. பொன்னணி - பொன்னாலாகிய காப்பு; பொன்னாலாகிய கங்கணம் எனினும் பொருந்தும். முன்னே கங்கணம் எனப் பொதுப்படக் கூறினமையின் இங்கே அது பொற் கங்கணம் என்றற்கு, “பொன்னணி என் கரத்தணிந்தாய்” என்று கூறுகின்றார் போலும். சித்தர் - ஞான சித்தியை யுடைய பெருமக்கள். சித்துரு - ஞானத்தின் திருவரு. சித்து -

     (5)