பக்கம் எண் :

4805.

          புல்வழங்கு புழுஅதனில் சிறியேனைப் புணர்ந்தருளிச்
          சொல்வழங்கு தொழில்ஐந்தும் துணிந்துகொடுத் தமுதளித்தாய்
          கல்விபெறு நின்னடியர் கழகநடு வைத்தென்னைச்
          செல்வமொடு வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.

உரை:

     ஞான சபையில் நடிக்கின்ற பெருமானே! புன்மை பொருந்திய புழுவினும் அற்பனாகிய என்பால் வந்தருளிச் சொல்லப்படுகின்ற படைத்தல் முதலிய தொழிலைந்தும் என்னைத் தெளிந்து என்னிடம் கொடுத்து அதற்கேற்ற திருவருள் ஞானமாகிய அமுதத்தைத் தந்தருளினாய்; கல்வியிற் சிறந்த நின்னுடைய அடியார் கூட்டத்தின் நடுவே என்னை இருக்க வைத்துச் சிறப்போடு என்னை வளர்த்தருளுகின்றாய்; நின்னுடைய அருட் கொடைதான் என்னே. எ.று.

     புன்மை பொருந்திய புழுவைப் “புல் வழங்கு புழு” என்று புகல்கின்றார். புணர்தல் - ஈண்டு வந்தருளுதல் மேற்று. துணிதல் - தெளிதல்; அஃதாவது இதனை இதனால் இவன் முடிக்கும் என்று தெளிதல். ஞானக் கல்வியால் மேம்பட்ட அடியார்களைக் “கல்வி பெறும் நின் அடியர்” என்று சிறப்பிக்கின்றார். குறை யாதுமின்றி வளர்க்கின்றாய் என்பாராய், “செல்வமொடு வளர்க்கின்றாய்” என மொழிகின்றார்.

     (9)