4810. கூறுகந் தாய்சிவ காமக் கொடியைக் கொடியில்வெள்ளை
ஏறுகந் தாய்என்னை ஈன்றுகந் தாய்மெய் இலங்குதிரு
நீறுகந் தாய்உல கெல்லாம் தழைக்க நிமிர்சடைமேல்
ஆறுகந் தாய்மன்றில் ஆட்டுகந் தாய்என்னை ஆண்டவனே.
உரை: என்னை ஆண்டருளிய சிவபெருமானே! சிவகாமவல்லி எனப்படும் உமாதேவியைத் திருமேனியில் ஒரு பாங்காகக் கொண்டவனே! வெள்ளை நிற எருதெழுதிய கொடியை உடையவனே! எளியவனாகிய என்னை இவ்வுலகத்தில் பிறப்பித்து மகிழ்ந்தவனே! திருமேனியில் நீறணிந்தவனே! உலகங்கள் யாவும் உய்ந்தோங்குதற் பொருட்டு உயர்ந்த சடையின்கண் கங்கையாறு பொருந்தினவனே! சபையின்கண் நடனம் புரிபவனே வணக்கம். எ.று.
உமாதேவிக்குச் சிவகாமவல்லி என்பதும் பெயராதலால், “சிவகாமக் கொடி” என்று சொல்லுகின்றார். வல்லி - கொடி. வெள்ளை ஏறு - வெண்மை நிறமுடையது எருது. வெண்ணீறு சண்ணித்த மேனியனாதலால், “மெய் இலங்கு திருநீறு உகந்தாய்” என்று புகழ்கின்றார். உலகம் முழுதும் அழியுமாறு போந்த கங்கைப் பெரு வெள்ளத்தைத் தன் சடையில் தாங்கிக் காத்தளித்தமை பற்றி, “உலகெல்லாம் தழைக்க நிமிர் சடை மேல் ஆறுகந்தாய்” என்று கூறுகின்றார். “சல முகத்தால் அவன் சடையில் பாய்ந்திலளேல் தரணி எல்லாம் பிலமுகத்தேப் புகப் பாய்ந்து பெருங் கேடாம் சாழலே” என்று மாணிக்கவாசகர் உரைப்பது (4)
|