4814. நான்செய்த புண்ணியம் யார்செய் தனர்இந்த நானிலத்தே
வான்செய்த தேவரும் காணாத காட்சி மகிழ்ந்துகண்டேன்
ஊன்செய்த மெய்யும் உயிரும் உணர்வும் ஒளிமயமாக்
கோன்செய வேபெற்றுக் கொண்டேன்உண் டேன்அருட் கோன்அமுதே.
உரை: வானுலகத்துத் தேவர்களும் கண்டிராத சிவக் காட்சியைக் கண்டு மகிழ்கின்றேனாதலால் இந்த நிலவுலகத்தில் நான் செய்த புண்ணியத்தை வேறு யாரும் செய்திலர் எனக் கருதுகின்றேன்; அன்றியும், ஊனாலாகிய என் உடம்பும் உயிரும் உணர்வும் ஞான ஒளிமயமாய்ச் சிவபெருமானாகிய தலைவனால் மாற்றுதல் பெற்று அவனது திருவருளாகிய அமுதத்தையும் உண்டு சுரக்கின்றேன். எ.று.
வானுலகத்துத் தேவர்களை “வான் செய்த தேவர்” என்றும், அவர்கள் காணாத சிவக் காட்சியைத் தாம் பெற்று இன்புறுமாறு விளங்க, “நான் செய்த புண்ணியம் யார் செய்தனர்” என்றும் இயம்புகின்றார். நானிலம் - நிலவுலகம். “நடுவண் ஐந்திணை நடுவணது ஒழிய படுதிரை வையம் பாத்திய பண்பே” என்று தொல்காப்பியர் முதலிய சான்றோர் கூறுதல் காண்க. கோன் - தலைவன். விரும்பினால் எதனையும் எப்படியும் மாற்றுவான் என்ற கருத்து தோன்ற, “ஒளி மயமாக் கோன் செயவே பெற்றுக் கொண்டேன்” என்று கூறுவதன் நயம் உணர்ந்து கொள்க. (8)
|