4816. சிற்றம் பலத்தைத் தெரிந்துகொண் டேன்எம் சிவன்அருளால்
குற்றம் பலவும் தவிர்ந்துநின் றேன்எண் குணக்குன்றிலே
வெற்றம்பல் செய்தவர் எல்லாம் விரைந்து விரைந்துவந்தே
நற்றம் பலம்தரு வாய்என்கின் றார்இந்த நானிலத்தே.
உரை: சிவபெருமான் திருவருளால் திருச்சிற்றம்பலத்தின் உண்மை நலத்தைத் தெரிந்து கொண்டதோடு எண்வகைக் குணக்குன்றாகிய சிவனருளை அடைந்து என்னுடைய குற்றங்கள் பலவற்றையும் போக்கிக்கொண்டு தூயனாகி விட்டேன்; என்னைக் கண்டு வீண் பழி மொழிந்தவர் எல்லாரும் மிக விரைவாக என்பால் வந்து நற்குறியாகிய தாம்பூலம் தருக என்று இந்த உலகின்கண் கேட்கின்றார்கள்; இதனை என்னென்பது. எ.று.
சிற்றம்பலம் என்பது சிவபெருமான் ஆடல் புரியும் ஒரு அம்பல மேடையென்று கூறுவாராக, யான் அது ஞானாகாசமாய்த் தரிசிப்போர்க்கு ஞான வளம் தரும் பேரவை என்று சிவனருளிய திருவருள் ஞானத்தால் உணர்ந்து கொண்டேன் என்பாராய், “சிற்றம்பலத்தைச் சிவனருளால் தெரிந்து கொண்டேன்” என்று தெரிவிக்கின்றார். குணமுடையாரைச் சேர்ந்தவர் குற்றம் நீங்கிக் குணவான்கள் ஆகுவர் என்ற உலகியற்கு ஒப்பக் குணக்குன்றாகிய சிவனருளைச் சார்ந்து அவனுடைய குணநலத்தால் குற்றமெல்லாம் நீங்கித் தூயவனாயினேன் எனத் தெளிவித்தற்கு, “குற்றம் பலவும் தவிர்த்து நின்றேன்” என்று சாற்றுகின்றார். சிவபெருமானை “எண்குணத்தான்” என்று பெரியோர் கூறுதலால், “எண் குணக்குன்று” என்று ஏத்துகின்றார். எண் குணங்களாவன: தன்வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வினனாதல், முற்று முணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றமுடைமை, வரம்பில் இன்பமுடைமை யென இவைகளாகும். வெற்றம்பல் - வீண்பழி; பொய்ப்பழியுமாம். நல்லதன் நன்மை விளங்க வெற்றிலையும் பாக்கும் தருவது உலகியல் மரபு. இதனைத் தம்பலம் என்றும், தாம்பூலம் என்றும் சொல்வது மரபாதலால், “நற்றம்பலம்” என்று சிறப்பிக்கின்றார். (10)
|