4817. ஒன்றுகண் டேன்திரு அம்பலத் தேஒளி ஓங்குகின்ற
நன்றுகண் டேன்உல கெல்லாம் தழைக்க நடம்புரிதல்
இன்றுகண் டேன்என்றும் சாகா வரத்தை எனக்கருள
மன்றுகண் டார்க்கிந்த வாழ்வுள தென்று மகிழ்ந்தனனே.
உரை: திருச்சிற்றம்பலத்தில் ஒன்றாகிய பரம்பொருளைக் கண்டேன்; கண்டவிடத்து ஞானஒளி விளங்குகின்ற நலத்தையும் கண்டு கொண்டேன்; அதன் மேலும் உலகங்கள் எல்லாம் இனிது தழைத்தோங்கச் சிவபிரான் நடம் புரியும் அருட் செயலை இப்பொழுது பார்த்தேன்; அதனால் சாகா வரத்தை எனக்கு அருளுதற்கு அம்பலத்தாடும் பெருமானுக்கு இந்த அருள் வாழ்வு நிலையாக உளது என்றறிந்து மகிழ்ச்சி கொண்டேன். எ.று.
சிவம் ஒன்றே பரம்பொருளாதலின் அதனை அம்பலத்தின்கண் அருளுருவில் காணப் பெற்றமை விளங்க, “அம்பலத்தே ஒன்று கண்டேன்” என்றும், அதன்கண் ஞானஒளி தோன்றிப் பரவுவதை இனிது கண்டமை புலப்பட, “ஒளி ஓங்குகின்ற நன்று கண்டேன்” என்றும் உரைக்கின்றார். உலகுயிர்கள் இனிது வாழ்தல் வேண்டி சிவபெருமான் அம்பலத்தின்கண் திருக்கூத்தாடுகின்றான் என்ற உண்மையைத் தாம் கண்டமை விளங்க, “உலகெலாம் தழைக்க நடம் புரிதல் இன்று கண்டேன்” எனவும், உலகம் தழைக்க அருள் நடனம் புரியும் அந்தப் பெருமானுக்கு என் போல்வார்க்குச் சாகா வரத்தைத் தரும் சார்புடைய ஞான இன்ப வாழ்வு இயல்பாக உளதென்று தெரிந்து, “மகிழ்கின்றேன்” எனவும் இயம்புகின்றார். மன்றின்கண் காட்சி தரும் அருட் சிறப்பை வியந்து அம்பலவாணரை, “மன்று கண்டார்” என்று பாராட்டுகின்றார். (11)
|