482. வல்வினைப் பகுதியால் மயங்கி வஞ்சர்தம்
கொல்வினைக் குழியிடைக் குதிக்கும் நெஞ்சமே
இல்வினைச் சண்முக என்று நீறிடில்
நல்வினை பழுக்குமோர் நாடு வாய்க்குமே.
உரை: வலிய வினை வகைகளால் அறிவு மயங்கி வஞ்சனை புரியும் தீயவர் கூட்டத்தை யடைந்து அறவினையைக் கொன்று தீவினை செலுத்தும் நரகக் குழிக்குச் சென்று அதனுட் குதித்துப் புதைபடும் நெஞ்சமே, வினைக்கே யிடமில்லாத சண்முக என்ற திருப்பெயரை யோதித் திருநீற்றை அணிகுவையாயின், நல்வினைகள் இன்பம் பழுக்கும் சிவபதமாகிய ஒப்பற்ற நாட்டு வாழ்வு நமக்கு எய்தும், காண், எ. று.
தம்மைச் செய்தாரைக் தாம் நல்கும் பயனை நுகர்விக்காமல் விடாது அவர் உயிரின்கட் கிடந்து அது புகும் உடம்பு தோறும் தொடரும் வல்லியல்பின வாதலால், வினைப் பகுதிகளை, “வல்வினைப்பகுதி” என உரைக்கின்றார். வினைச் சூழலில் அறிவு மயங்குவது பற்றி, “மயங்கி” எனவும், மயக்க நிலையில் வஞ்சரது வஞ்சம் புலப்படாமையால் அவர் கூட்டத்தை எளிதிற் பெற்றுத் தமது பண்புக்கொப்ப அறவினைகளை மாய்த்துத் தீவினைகளைச் செய்வித்து நரகத்தை அடைவிப்பது விளங்கக் “கொல்வினைக் குழியிடைக் குதிக்கும் நெஞ்சமே” எனவும் கூறுகின்றார். கொல்வினை, ஈண்டு நல்லறச் செயல்களைக் கொன்று தீயனவே செய்யும் தீவினைகளைக் குறிக்கிறது; கொலை முதலிய தீவினை எனினும் பொருந்தும், கொல்வினைப் பயனை நுகருமிடம் நரகமாதலின், அதனைக் “கொல்வினைக் குழி” எனக் குறிக்கின்றார். நரகத்தைக் குழி என்றமையின், அதன்கட் புகுவதைக் குதித்தல் என்கிறார். வினைக்குக் காரணமாகாமை பற்றி, “இல்வினை” எனப்படுகிறது; தீதில்லாத வினையென்று கொண்டு, சண்முக என ஓதுவதை இல்வினை என்பதாக இயம்புவதும் பொருளாம் என்க. இவ்வுலகில் நட்டு வளர்க்கும் நல்வினையாகிய மரம் புகழ் பூத்து அறம் காய்த்து ஞானம் பழுத்து மேலுலகில் இன்பம் பயக்கும் என்பது பற்றி, “நல்வினை பழுக்கு மோர் நாடு வாய்க்குமே” என நவில்கின்றார்.
இதனாற் சண்முகா என ஓதி நீறணிந்தால் நல்வினை பழுக்கும் நாட்டை எய்தலாம் என்பதாம். (3)
|