பக்கம் எண் :

483.

    கடும்புலைக் கருத்தர்தம் கருத்தின் வண்ணமே
    விடும்புன லெனத்துயர் விளைக்கு நெஞ்சமே
    இடும்புகழ்ச் சண்முக என்று நீறிடில்
    நடுங்குமச் சம்நினை நண்ணற் கென்றுமே.

உரை:

     கடிய புலைக் கருத்துக்களை யுடையவர்களின் எண்ணப்படி மடை யுடைத்து விட்ட தண்ணீர் போலப் பெருகி வரும் துன்பங்களைச் செய்யும் நெஞ்சமே, புகழை நல்கும் சண்முகா என்ற திருப்பெயரை ஓதித் திருநீறணிந்து கொண்டால், அச்சம் என்பது நின்னை நெருங்குதற்கு உடல் நடுங்கும் என அறிக, எ. று.

     புலைக் கருத்தர் - புலை கொலை முதலிய கொடிய பாவக் கருத்தும் செயலும் உடைய தீயவர். இப்புலை முதலிய பாவங்களை மிகுதியும் செய்வது தோன்றக் “கடும் புலைக் கருத்தர்” என்று குறிக்கின்றார். கடுமை, மிகுதி குறித்தது. தீயவர் கருத்துப்படி மடை யுடைத்து விடப் பாய்ந்தோடும் நீர் வயற்கும் நாட்டவர்க்கும் தீங்கு விளைவிப்பது போல, அறிவு அறைபோக எழும் தீய நினைவுப் பெருக்கால் உயிர்க்கும் உடம்புக்கும் உறவுகட்கும் மனம் துன்பம் செய்வது விளங்கப் “புலைக் கருத்தர்தம் கருத்தின் வண்ணம் விடும்புனல் எனத் துயர் விளைக்கும் நெஞ்சமே” என்று வைகின்றார். சண்முக என்று பூசம் திருநீறு புகழும் தருவ தென்றற்கு, “இடும் புகழ்ச் சண்முக என்று நீறிடில்” என்றும் அச்சம் என்பது கீழ்மைப்படுத்துவ தொன்றாகலின், இதனால் அது நெருங்காது என்பார். “அச்சம் நினை நண்ணற்கு என்றும் நடுங்கும்” என்றும் கூறுகின்றார். இடும்போது மட்டிலன்றி எப்போதும் என்றற்கு “என்றும்” என வுரைக்கின்றார். “அச்சமே கீழ்களது ஆசாரம்” (குறள்) என்பதால், அச்சம் கீழ்மைக் குரித்தாதல் காணலாம்.

     இதனால் சண்முகா என்று ஓதி நீறிடுவது கீழ்கட் குரியதாகிய அச்சத்தை நெருங்க விடாது எனத் தெரிவித்தவாறாம்.

     (4)