பக்கம் எண் :

4832.

          தூக்கம் கெடுத்துச் சுகம்கொடுத்தான் என்தனக்கே
          ஆக்கமென ஓங்கும்பொன் அம்பலத்தான் - ஏக்கமெலாம்
          நீங்கினேன் எண்ணம் நிரம்பினேன் பொன்வடிவம்
          தாங்கினேன் சத்தியமாத் தான்.

உரை:

     எனக்குப் பெரிய செல்வமாக ஓங்கி ஒளிர்கின்ற பொன்னம்பலத்துக் கூத்தப்பெருமான் துன்பம் விளைவிக்கும் சுக நிலையைக் கொடுத்தருளினான்; அதனால் எனக்கு உண்டாகியிருந்த ஏக்கமெல்லாம் நீங்கி எண்ணிய எண்ணமெல்லாம் நிறைவேறப் பெற்று மெய்யாகவே பொன் வடிவம் எய்தினேன். எ.று.

     உலகிற் பெறப்படும் ஆக்கங்களில் பொன் சிறந்ததாகலான், பொன் வேய்ந்த அம்பலத்தை யுடைய சிவபெருமானை, “ஆக்கம் என ஓங்கும் பொன்னம்பலத்தான்” என்று புகல்கின்றார். ஏக்கம் - எய்த வேண்டுவது எய்தா வழி உளதாகும் மனக்கவலை. தூக்கம் - ஈண்டுத் துன்ப மிகுதியால் உளதாகும் மயக்கத்தின் மேல் நின்றது. சுகம் என்றது சுகபோகத்தைச் சுட்டி நின்றது. சத்தியம் - மெய்ம்மை.

     (15)