4833. துன்பம் கெடுத்துச் சுகம்கொடுத்தான் என்தனக்கே
அன்பகத்தில் வாழும்சிற் றம்பலத்தான் - இன்புருவம்
தாங்கினேன் சாகாத் தனிவடிவம் பெற்றொளியால்
ஓங்கினேன் உண்மை உரை.
உரை: அன்பு நிறைந்த மனமுடைய பெருமக்கள் உள்ளத்தில் எழுந்தருளும் சிற்றம்பலத்தை யுடைய சிவபெருமான் எனக்கு எய்திய துன்பங்களைப் போக்கிச் சுகபோக வாழ்வை எனக்குக் கொடுத்தருளினான்; அதனால் நான் இன்ப உருவத்தையும் சாகாத உடம்பையும் பெற்று அருளொளியால் உயர்ந்திருக்கின்றேன்; இது பொய்யுரையன்று உண்மை. எ.று.
மெய்யன்பர்களுடைய உள்ளத்தையே கோயிலாகக் கொண்டவனாதலால் அம்பலவாணனாகிய சிவனை, “அன்பகத்தே வாழும் சிற்றம்பலத்தான்” என்று தெரிவிக்கின்றார். சாகாத் தனி வடிவம் - இறப்பில்லாத உடம்பு. ஞான வாழ்வில் மேம்படுதல் தோன்ற, “ஒளியால் ஓங்கினேன்” என உரைக்கின்றார். தமது உரையை வற்புறுத்தற்கு, “உண்மை உரை” என்று மொழிகின்றார். (16)
|