பக்கம் எண் :

4835.

     மனம்எனும்ஓர் பேய்க்குரங்கு மடைப்பயலே நீதான்
          மற்றவர்போல் எனைநினைத்து மருட்டாதே கண்டாய்
     இனமுறஎன் சொல்வழியே இருத்தியெனில் சுகமாய்
          இருந்திடுநீ என்சொல்வழி ஏற்றிலைஆ னாலோ
     தினையளவுன் அதிகாரம் செல்லவொட்டேன் உலகம்
          சிரிக்கஉனை அடக்கிடுவேன் திருவருளால் கணத்தே
     நனவில்எனை அறியாயோ யார்எனஇங் கிருந்தாய்
          ஞானசபைத் தலைவனுக்கு நல்லபிள்ளை நானே.

உரை:

     மனம் என்று சொல்லப்படும் ஒரு பேய் பிடித்த குரங்கின் செயலையுடைய அறிவில்லாத சிறுவனே! நீ என்னை மற்றவர்களைப் போல எண்ணிக்கொண்டு மயக்குதல் ஒழிக; நட்புண்டாக என் சொல் வழியே இருப்பாயானால் சுகமாய் இருந்திடுக; என் சொல்லை ஏற்க மாட்டாயானால் தினையளவு கூட உன் செல்வாக்கு என்னிடம் செல்லுமாறு இடங்கொடுக்க மாட்டேன்; அதற்கு மாறாக உலகவர் எல்லாரும் கண்டு இகழ்ந்து சிரிக்குமாறு திருவருள் துணையால் ஒருகணப் பொழுதில் அடக்கி ஒடுக்கி விடுவேன்; உன் அறிவில் என்னை இன்னார் என அறியாமல் யாரென்று கருதிக் கொண்டு என்னுள் இருக்கின்றாய்; ஞான சபைத் தலைவனாகிய சிவனுக்கு நான் ஒரு நல்ல பிள்ளை என அறிவாயாக. எ.று.

     மனமாகிய அந்தக்கரணத்தின் சேட்டைகளைக் குறிப்பதற்கு, “பேய்க் குரங்கு மடப்பயலே” என்று உருவகம் செய்து ஏசுகின்றார். மனம்போன போக்கில் போகின்ற மக்களைப் போல நானும் மருண்டு திரிபவன் என நினைக்க வேண்டாம் என்பாராய், “மற்றவர் போல் எனை நினைத்து மருட்டாதே கண்டாய்” என்று கூறுகின்றார். அறிவில்லாத சிறுவனே என்றற்கு, “மடப்பயலே” என்று வைகின்றார். இனம்-அன்பு; நட்புமாம். என் சொல்லை ஏற்காவிடில் கேடு இது என்பாராய், “என் சொல்வழி ஏற்றிலையானால் தினையளவு உன் அதிகாரம் செல்ல வொட்டேன்” என்றும், “உலகம் சிரிக்க உனை அடக்கிடுவேன்” என்றும் கூறுகின்றார். கரணங்களில் ஒன்றாதலின் மனத்தை அடக்குதற்குத் துணை புரிய வல்லது திருவருட் சத்தியாதலால், “உலகம் சிரிக்க உனை அடக்கிடுவேன் திருவருளால் கணத்தே” என்று செப்புகின்றார். நனவு - உணர்வு. மனத்தை அறிவின்வழி நிறுத்தி அடக்கியாளும் வன்மை எனக்கு உண்டென அறிக என்பாராய், “நனவில் எனை அறியாயோ யாரென இங்கிருந்தாய்” என்று உரைக்கின்றார். இங்கு என்பது உடம்பின் உள்ளகம். எல்லாம் வல்லவனாதலின் ஞான சபைத் தலைவனுக்கு நான் மகனாதலை அறிந்து அடங்குக என அறிவுறுத்தற்கு, “ஞான சபைத் தலைவனுக்கு நல்ல பிள்ளை நானே” என்று நவில்கின்றார். இதனால் மனமாகிய தத்துவத்தை அடக்கும் திறம் புலப்படுத்தியவாறாம்.

     (2)