485. செறிவிலா வஞ்சகச் செல்வர் வாயிலில்
அறிவிலா துழலுமென் னவல நெஞ்சமே
எறிவிலாச் சண்முக வென்று நீறிடில்
மறிவிலாச் சிவகதி வாயில் வாய்க்குமே.
உரை: அடக்க மில்லாத வஞ்சம் நிறைந்த செல்வமுடைய மக்களின் மனைவாயிலை யடைந்து நின்று நல்லறி வின்றி வருந்தும் வலியில்லாத நெஞ்சமே, வெறுத்த சொற்களைப் பேசாத சணமுகா என்று சொல்லித் திருநீறு அணிந்து கொண்டால் சிவகதிக்குத் தடை யில்லாத வாயில் பெறலாம், எ. று.
செறிவு - அடக்கம். வஞ்சகச் செல்வர் - வஞ்சக வழியிற் செல்வம் திரட்டிய செல்வமக்கள். நாவடக்க மின்றி வாயில் வந்தவை பேசி வந்தோர் மனத்தைப் புண்படுத்தும் செல்வர்களைச் “செறிவிலா வஞ்சகச் செல்வர்” என்றும், அவரது இயல்பும் குறிப்பும் முன்பே அறியாமற் செல்வதும் பின்பு வருந்துவதும் மனத்திண்மை யில்லார் செயலாதல் விளங்கச் “செல்வர் வாயிலில் அறிவிலாது உழலும் என் அவல நெஞ்சமே” என்றும் இயம்புகின்றார். அவலம், ஈண்டு வலியின்மை மேற்று. எறிவு - வெறுத்துரைத்தல்; வெறுத்து நோக்குதலுமாம். மறிவு - தடை. மறித்தல் இல்லாத வாயில் என இயையும். “மறிந்த எல்லையில் ஆறுமா முகமுடை யண்ணல், சிறந்த ஆறெழுத் துண்மையை விதிமுறை செப்ப” (கந்தபு. 4:6:66) என வழங்குவது காண்க. வாய்க்கும் - கருதிய பயனை எய்துவிக்கும். இன்றும் இயல்பு காண் என்றற்கு நிகழ் காலத்தாற் கூறுகின்றார்.
இதனால் சண்முகா எனத் திருநீறணிவார் பெறும் பயன் உரைத்தவாறாம். (6)
|