பக்கம் எண் :

4855.

     எம்பொருள் எனும்என் அன்புடை மகனே
          இரண்டரைக் கடிகையில் உனக்கே
     அம்புவி வானம் அறியமெய் அருளாம்
          அனங்கனை தனைமணம் புரிவித்
     தும்பரும் வியப்ப உயர்நிலை தருதும்
          உண்மைஈ தாதலால் உலகில்
     வெம்புறு துயர்தீர்ந் தணிந்துகொள் என்றாற்
          மெய்ப்பொது நடத்திறை யவரே.

உரை:

     எமக்குப் பொருள் என்று சொல்லப்படுகின்ற அன்புள்ள மகனே; இன்னும் இரண்டரை நாழிகையில் மண்ணவரும் விண்ணவரும் அறியும்படியாக மெய்ம்மை சான்ற திருவருள் ஞானமாகிய பெண்ணை மணம் செய்வித்து மேலுலகத் தேவர்களும் கண்டு வியக்கும் படியான உயர்ந்த ஞான நிலையைத் தரப் போகின்றோம்; இது உண்மை யாதலால் உலக வாழ்வில் வருத்துகின்ற துன்பங்களைத் தீர்த்து மேலுலக இன்ப வாழ்வில் விருப்பம் கொள்க. என்று மெய்ம்மை புரிந்த அம்பலத்தில் திருக்கூத்தாடுகின்ற சிவபெருமான் உரைத்தருளினார் என அறிக. எ.று.

     தாம் பெற்ற மக்களைத் தமக்குரிய பொருள் என்று பெரியோர் கூறுவது உண்மையாதலால், “எம்பொருள் எனும் என் அன்புடை மகனே” என்று கூறுகின்றார். “தம் பொருள் என்ப தம் மக்கள்” என்பது திருக்குறள். அம்புவி - மண்ணுலகம். திருவருள் ஞானத்தைப் பெண்ணாக உருவகம் செய்கின்றாராதலால், “மெய்யருளாம் அனங்கனை” என்று குறிக்கின்றார். அனங்கனை - பெண். இது அங்கனையார் எனவும் வழங்கும். மணம் புரிவித்தல் - ஞானம் நல்குதல். உம்பர் - தேவருலகத்துத் தேவர். உலகியல் துன்பங்களை உயிர்களை வெதுப்பித் துன்புறுத்துவதாதலால் அவற்றால் மனவொருமை சிதைவது பற்றி, “உலகில் வெம்புறு துயர் தீர்ந்து அணிந்துகொள்” என்று அறிவிக்கின்றார். அணிந்து கொள்ளலாவது ஞானத் திருமணத்திற்குரிய சிவக்கோலம் புனைதல். ஒருத்தியை மணம் செய்து கொள்பவன் தன்னை ஆடை அணிகளால் ஒப்பனை செய்துகொள்க என்றற்கு, “அணிந்து கொள்” எனச் சுருங்க உரைக்கின்றார். அந்தத் திருக்கோலத்தையும் விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக இரண்டரைக் கடிகையைப் பாட்டுத் தோறும் தொடர்ந்து உரைக்கின்றார்.

     (2)