பக்கம் எண் :

4857.

     ஈதுகேள் மகனே மெய்யருள் திருவை
          இரண்டரைக் கடிகையில் நினக்கே
     ஊதியம் பெறவே மணம்புரி விப்பாம்
          உண்மைஈ தாதலால் இனிவீண்
     போதுபோக் காமல் மங்கலக் கோலம்
          புனைந்துளம் மகிழ்கநீ என்றார்
     தீதுதீர்த் தென்னை இளந்தையில் தானே
          தெருட்டிய சிற்சபை யவரே.

உரை:

     மகனே, நாம் சொல்லும் இதனைக் கேட்பாயாக; திருவருள் மெய்ஞ்ஞானமாகிய நன்மகளை இரண்டரை நாழிகையில் நீ பேரின்பம் பெறுதற் பொருட்டு மணம் புரிவிப்போம்; இது மெய்ம்மை உரையாகும்; ஆகவே இனியும் வீண்பொழுது போக்காமல் திருமணக் கோலத்தைப் பூண்டு இன்புறுக என்று இளமையில் என்னுடைய குற்றங்களைப் போக்கித் தானே தனது அருளொளியால் தெளிவித்த ஞான சபைத் தலைவராகிய சிவபெருமான் உரைத்தருளினார். எ.று.

     மெய்யருள் திரு - மெய்ம்மைத் திருவருள் ஞானமாகிய மடந்தை என்பதாம். இந்த ஞான மடத்தால் பெறப்படுவது மெய்ஞ்ஞான போகமாதலால் அதனை “ஊதியம்” என உவந்துரைக்கின்றார். மக்கள் நிலையில் நின்று பேசுதலால், “ஈது கேள் மகனே” என்றும், “உண்மை ஈது” என்றும் இசைக்கின்றார். சிவஞான யோகத்திற்குரிய சிவக்கோலம் “மங்கலக் கோலம்” என்று உரைக்கப்படுகின்றது. பாசச் சேர்க்கையால் பிறந்த குற்றத்தைத் “தீது” என்று செப்புகின்றார். இளமை - இளந்தை என வந்தது; குழவி - குழந்தை என வருதற் போல.

     (4)