4858. விரைந்துகேள் மகனே உலகெலாம் களிக்க
மெய்யருள் திருவினை நினக்கே
வரைந்துநன் மணஞ்செய் தொருபெரு நிலையில்
வைத்துவாழ் விக்கின்றோம் அதனால்
இரைந்துளம் கவலேல் இரண்டரைக் கடிகை
எல்லையுள் எழில்மணக் கோலம்
நிரைந்துறப் புனைதி என்றுவாய் மலர்ந்தார்
நிருத்தஞ்செய் ஒருத்தர்உள் உவந்தே.
உரை: அம்பலத்தில் திருக்கூத்தாடும் ஒப்பற்ற சிவபெருமானார் திருவுள்ளம் உவந்து மகனே நான் சொல்வதை விரைந்து கேட்பாயாக; உலகவர் அனைவரும் கண்களால் கண்டு மகிழுமாறு மெய்ம்மைத் திருவருள் ஞானமாகிய மங்கையை உனக்கென வரையறை செய்து நன்ஞான மணத்தைச் செய்வித்து ஒரு பெரிய நிலையில் உன்னை இருத்தி வாழச் செய்யப் போகின்றோம்; அதனால் முழக்கமிட்டு மனம் வருந்த வேண்டா; இரண்டரை நாழிகையில் அழகிய ஞானத் திருமணக் கோலத்தைக் குறைவறப் புனைந்து கொள்வாயாக என்று உரைத்தருளினார். எ.று.
மக்கள் மனம் நல்லுரை கேட்டற்குச் சுணங்கும் இயல்பினதாதலால் ஆர்வமுடன் விரைந்து கேட்பாயாக என்பாராய், “விரைந்து கேள் மகனே” என்று விளம்புகின்றார். இன்னார்க்கு இன்னவன் உரியவன் என்று வரையறை செய்து பின்னர்த் திருமணம் செய்தல் உலகியல் மரபாகலின் அம்மரபு பற்றி, “மெய்யருள் திருவினை தனக்கே வரைந்து நன்மணம் செய்து வாழ்விக்கின்றோம்” என இயம்புகின்றார். சிவயோகப் போகப் பெருவாழ்வினும் பெரிய இன்பநிலை யாண்டும் இன்மையின், “ஒரு பெருநிலையில் வைத்து வாழ்விக்கின்றோம்” என்று உரைக்கின்றார். இரைதல் - முழங்குதல். வாழ்வின் பெருமையையும் உனது சிறுமையையும் எண்ணுமிடத்து உன் உள்ளத்தில் பேரச்சமும் கவலையும் உண்டாயினும் அதுபற்றிக் கவலுதல் வேண்டா என அறிவித்தற்கு, “இரைந்து உளம் கவலேல்” என ஊக்குகின்றார். நிறைதல் - ஈண்டு எதுகை நோக்கி நிரைதல் என வந்தது. (5)
|