பக்கம் எண் :

4859.

     களிப்பொடு மகனே அருள்ஒளித் திருவைக்
          கடிகைஓர் இரண்டரை அதனில்
     ஒளிப்பிலா துலகம் முழுவதும் அறிய
          உனக்குநன் மணம்புரி விப்பாம்
     அளிப்புறு மகிழ்வால் மங்கலக் கோலம்
          அணிபெறப் புனைகநீ விரைந்தே
     வெளிப்பட உரைத்தாம் என்றனர் மன்றில்
          விளங்குமெய்ப் பொருள்இறை யவரே.

உரை:

     மகனே, திருவருள் ஒளியாகிய ஞான மடந்தை இரண்டரை நாழிகையில் மிக்க மகிழ்ச்சியுடன் உலகம் முழுதும் மறைப்பு சிறிதுமின்றி அறியுமாறு உனக்கு நன்மணம் புரியப் போகின்றோம்; அதனால் நிறையும் அருளின்பத்தோடு அழகுறத் திருமணக் கோலத்தை நீ விரைந்து மேற்கொள்வாயாக; இதனை உனக்கு வெளிப்படையாக உரைக்கின்றோம் என்று அம்பலத்தில் எழுந்தருளுகின்ற மெய்ப்பொருளாகிய சிவபெருமான் உரைத்தருளினார். எ.று.

     திருவருள் ஞானம் ஒளி மயமாகலின் அதனை “அருளொளி” என்றும், அதனை மணமகளாக உருவகம் செய்தல் பற்றி, “அருளொளித் திரு” என்றும் எடுத்துரைக்கின்றார். அத்திருமகள் மிக வுயர்ந்தவள் என்ற குறிப்புப் புலப்பட, “களிப்பொடு” என்று கூறுகின்றார். ஒளியால் விளக்க முறுவதே யன்றி இருளால் மறைக்கப்படுவதும் உலகிற்கு இயல்பாதல் பற்றி, “ஒளிப்பிலாது உலகம் முழுவதும் அறிய” என்று சொல்லுகின்றார். உலகம் இருளால் ஒளிப்புறுவது உண்மையாதல் விளங்க, “மாயிருள் ஞாலம் மருவின்றி விளங்கப் பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம்” என்று திருமுருகாற்றுப்படை கூறுவது காண்க. உலகறிய நடைபெறுவது நன்மணமாதலின், “உலகம் முழுவதும் அறிய உனக்கு நன்மணம் புரிவிப்பாம்” என்று விளம்புகின்றார். ஆதரவு மிகுதியால் பிறக்கும் மகிழ்ச்சி “அளிப்புறு மகிழ்வு” என்று போற்றப்படுகின்றது. களவு மணத்தைக் குறிப்பாகவும் பலர் அறிய நன்மணத்தை வெளிப்படையாகவும் உரைக்கும் முறைமை பற்றி, “வெளிப்பட உரைத்தாம் என்றனர்” என்று விளம்புகின்றார். ஞானிகளின் ஞானக் காட்சியில் ஞான ஒளி விளங்க அம்பலத்தில் எழுந்தருளுகின்றாராதலின், “மன்றில் விளங்கும் மெய்ப்பொருள் இறையவர்” என்று எடுத்துரைக்கின்றார்.

     (6)