486. மறிதரு கண்ணினார் மயக்கத் தாழ்ந்துவீண்
வெறியொடு மலைத்திடர் விளைக்கு நெஞ்சமே
நெறிசிவ சண்முக என்று நீறிடில்
முறிகொளீஇ நின்றவுன் மூடம் தீருமே.
உரை: மான் போன்ற கண்களை யுடைய மகளிரது காம மயக்கத்தில் வீழ்ந்து மூழ்கிப் பயனில்லாத காம வெறி கொண்டு பிறரோடு பிணங்கித் துன்பம் விளைவிக்கும் நெஞ்சமே, சிவநெறி பேணும் சண்முகா என்று சொல்லி நீறணிந்து கொண்டால், முற்றி முதிர்ந்திருக்கும் உனது மூடத் தன்மை நீங்கி விடும், எ. று.
மறி - மான். மான் போல் மருண்ட விழியினை யுடையராதல் பற்றி மகளிரை, "மறிதரு கண்ணினார்" என்று கூறுகின்றார். "மறிதே ரொண்கண் மடநல்லார் வலையிற் பட்டு மதி மயங்கி அறிவே யழிந்தேன் ஐயா நான்" (ஆலங்கா) என நம்பியாரூரர் உரைப்பது காண்க. மகளிரால் உளதாகும் மயக்கம் காம மயக்கம். பயனில்லாத வெறியாதல் தோன்றக் காம நெறியை, "வீண் வெறி" என்கிறார். அவ்வெறி யுற்றோர் எளிதிற் சினமுற்றுத் தோழரோடும் பிணங்குப வாகலின், "மலைந்து" எனப் பொதுப்பட மொழிந்து, அதனால் துன்பமே எய்துதல் பற்றி, "இடர் விளைக்கும் நெஞ்சமே" என வுரைக்கின்றார். நெறி, ஈண்டுச் சிவநெறி. முருக வழிபாடு தமிழகத்திற் சிவநெறிக்கு வேறாகக் கருதப்படுவ தில்லாமையால், "நெறி சிவ சண்முக என்று நீறணிக" என அறிவுறுத்துகின்றார். வடவர், முருக வழிபாட்டைக் கௌமாரம் எனப் பிரித்துரைப்பர். முறிகொளல் - எளிதில் முறியு மளவு முதிர்தல். முறிவோலையால் இசை வெழுதிப் பிணித்தது போலப் பிணித்தலையும் முறிகொளல் என்பர். இதனை ஓலை முறி என்றும் வழங்குப. மூடம் - மூடத் தன்மை; மூவகை மூடமுமாம்.
இதனால் சண்முகா என்று சொல்லித் திருநீறணிய வரும் பயன் உரைத்தவாறாம். (7)
|