4862. தூங்கலை மகனே எழுகநீ விரைந்தே
தூயநீர் ஆடுக துணிந்தே
பாங்குற ஓங்கு மங்கலக் கோலம்
பண்பொடு புனைந்துகொள் கடிகை
ஈங்கிரண் டரையில் அருள்ஒளித் திருவை
எழில்உற மணம்புரி விப்பாம்
ஏங்கலை இதுநம் ஆணைகாண் என்றார்
இயன்மணி மன்றிறை யவரே.
உரை: மகனே இனியும் சோம்பி யிராதே; விரைந்து எழுந்து தூய நன்னீராடுக; நிகழ்ச்சியின் உண்மை தெளிந்து ஞானத் திருமணத்திற்கு ஒத்த வகையில் திருமணக் கோலத்தைச் செம்மையுற அணிந்து கொள்வாயாக; இரண்டரை நாழிகையில் திருவருள் ஞானமாகிய அரிவையை அழகுற உனக்கு மணம் செய்து வைப்போம்; அது பற்றி நீ மனம் இரங்க வேண்டாம்; இது நமது ஆணை மொழியாகும் என்று உரைத்தருளினார் அழகிய மணிகள் இழைத்த அம்பலத்தின் தலைவராகிய இறைவர். எ.று.
தூங்கல் - சோம்புதல். தூக்கம் தெளியாமல் மடிந்திருக்க வேண்டாம்; விரைந்து எழுந்து தூய நீராடித் தெளிவுறுக என்பாராய், “தூங்கலை மகனே எழுக நீ விரைந்தே தூய நீராடுக துணிந்தே” என்று சொல்லுகின்றார். திருமணத் தோற்றத்திற்கும் செய்வினைகளுக்கும் ஒப்ப அமைந்த திருமணக் கோலத்தைப் பூண்டு கொள்க என வற்புறுத்துதற்கு, “பாங்குற ஓங்கு மங்கலக் கோலம் பண்பொடு புனைந்து கொள்க” என்று பகர்கின்றார். திருமண நினைவே மிகுந்து விரைவில் அது நடைபெறவில்லையே என்று ஏங்கும் மனநிலையை மாற்றுதற்கு, “ஏங்கலை இது நம்மாணை காண்” என்று அறிவுறுத்துகின்றார். (9)
|