4863. மயங்கிடேல் மகனே அருள்ஒளித் திருவை
மணம்புரி விக்கின்றாம் இதுவே
வயங்குநல் தருணக் காலைகாண் நீநன்
மங்கலக் கோலமே விளங்க
இயங்கொளப் புனைதி இரண்டரைக் கடிகை
எல்லையுள் என்றுவாய் மலர்ந்தார்
சயங்கொள எனக்கே தண்ணமு தளித்த
தந்தையார் சிற்சபை யவரே.
உரை: மகனே, மனம் மருளுதல் வேண்டா; அருள் ஞானமாகிய திருமகளை உனக்கு மணம் செய்விக்கின்றோம்; அதற்கும் இதுவே ஏற்ற நல்ல தருணமாகிய காலமாகும்; திருமணத்தின் பொருட்டு நீ நல்ல மங்கலக் கோலம் விளங்க மங்கல இசை முழங்க உன்னை இரண்டரை நாழிகையில் ஒப்பனை செய்து கொள்க என்று எல்லா வெற்றியும் எனக்குண்டாகக் குளர்ந்த ஞான அமுதத்தை எனக்கு அளித்தருளிய தந்தையும் ஞான சபைத் தலைவனுமாகிய சிவபெருமானார் உரைத்தருளினார். எ.று
ஞானத் திருமணம் தனக்கு நிகழுமோ என ஐயுற்றுக் கிடந்தமை புலப்பட, “மயங்கிடேல் மகனே” என்றும், அதனைக் காலமறிந்து யாம் செய்து வைப்போம் என்பாராய், “அருளொளித் திருவை மணம் புரிவிக்கின்றாம்” என்றும், அதற்குரிய காலத்தையும் யாம் குறித்துள்ளோம் என்றற்கு, “இதுவே வயங்கு நல்தருணக் காலை காண்” என்றும் இயம்புகின்றார். தமக்கு முன்பே திருவருள் ஞான அமுதத்தை அளித்துப் பேணினமை இனிது விளங்க, “தண்ணமுதளித்த தந்தையார்” என்று சாற்றுகின்றார். (10)
|