104. அடைக்கலம் புகுதல்
அஃதாவது, இறைவன் திருவருளையே புகலிடமாக மேற்கொண்டுரைத்தலாம். புகலிடமாகக் கொள்வதென்பது மனத்தில் எழுகின்ற எண்ணங்களையும் வாயில் பிறக்கின்ற சொற்களையும் மெய்யால் செய்யப்படுகின்ற செயல்களையும் திருவருளின் மயமாக ஒடுக்குவதாகும். 4864. எண்ணா நின்றேன் எண்ணம்எலாம் எய்த அருள்செய் கின்றதனித்
தண்ணார் அமுதே சிற்சபையில் தனித்த தலைமைப் பெருவாழ்வே
கண்ணார் ஒளியே ஒளிஎல்லாம் கலந்த வெளியே கருதுறும்என்
அண்ணா ஐயா அம்மாஎன் அப்பா யான்உன் அடைக்கலமே.
உரை: மனத்தால் எண்ணுகின்ற இயல்புடையவனாகிய எனது எண்ணங்கள் எல்லாம் எய்தியவாறு எனக்கெய்த அருள் செய்கின்ற ஒப்பற்ற தண்ணிய அமுதமாய் ஞான சபையில் தனித்து நின்று விளங்குகின்ற தலைமைப் பெருவாழ்வுடைய பெருமானே! கண் நிறைந்த ஒளியாகிய பொருளே! ஒளி வகைகள் எல்லாம் கலந்தொளிரும் பெருவெளியாக உள்ளவனே! உன்னையே நினைந்தொழுகும் எனக்கு ஐயனும் அம்மையும் அப்பனுமாகிய சிவனே! யான் உன் அடைக்கலப் பொருளாயினேன். எ.று.
எண்ணா நின்றேன் என்றது தன்மைப் பொருளில் வந்த நிகழ்கால விணையாலணையும் பெயர். எண்ணுவதே இயல்பாக உடைய கருவியாகிய மனத்தை உடையவனாதலால் தம்மை, “எண்ணா நின்றேன்” என வடலூர் வள்ளல் வெளிப்பட உரைக்கின்றார். எண்ணும் எண்ணங்கள் வீணாகுமாயின் யாரும் அவற்றை எண்ண மாட்டாராக யான் எண்ணியவை எண்ணியவாறு நின் திருவருளால் எய்துவதால் எண்ணிய வண்ணம் இருக்கின்றேன் என்பாராய், “எண்ணா நின்றேன் எண்ண மெலாம் எய்த அருள் செய்கின்ற தனித் தண்ணார் அமுதே” என்று போற்றுகின்றார். சிவயோகப் போக வாழ்வினும் பெருவாழ்வு வேறின்மை பற்றி, “தனித்த தலைமைப் பெருவாழ்வே” என்று பராவுகின்றார். ஞானவான்களின் ஞானக்கண் நிறைத்த ஞான ஒளியால் திகழ்வதால் சிவ பரம்பொருளை, “கண்ணார் ஒளியே” என்று புகழ்கின்றார். சிவஒளி நிலவும் பரவெளியின்கண் விளங்குவதால், “ஒளி யெல்லாம் கலந்த வெளியே” என்று விளம்புகின்றார். கருத்து முற்றும் நிறைந்து நிற்பது பற்றி, “கருதுறும் என் அண்ணா” எனவும், “அம்மையும் அப்பனுமாகிய பரம்பொருளே” எனவும் வாயாரப் போற்றி வடலூர் வள்ளல் சிவனருளில் அடைக்கலம் புகுகின்றார். (1)
|