பக்கம் எண் :

4865.

    திரைசேர் மறைப்பைத் தீர்த்தெனக்கே தெரியா வெல்லாந் தெரிவித்துப்
    பரைசேர் ஞானப் பெருவெளியில் பழுத்த கொழுத்த பழந்தந்தே
    கரைசேர் இன்பக் காட்சிஎலாம் காட்டிக் கொடுத்தே எனையாண்ட
    அரைசே ஐயா அம்மாஎன் அப்பா யான்உன் அடைக்கலமே.

உரை:

     திரையிட்டது போல என்னுடைய மலமறைப்பை நீக்கி யருளி அதனால் எனக்கு இதுகாறும் தெரியாதிருந்த எல்லாவற்றையும் தெரிவித்துச் சிவசத்தியோடு கூடிய ஞானப் பெருவெளியில் பழுத்து முதிர்ந்த கொழுமிய இனிய சிவஞானமாகிய பழத்தைத் தந்து, எல்லையாகிய இன்பக் காட்சிகள் அனைத்தையும் யான் காணக் கொடுத்து, என்னை ஆண்டு கொண்ட அருளரசனும் ஐயனும் அப்பனும் அம்மனுமாகிய சிவமே யான் இனி உன் அடைக்கலம். எ.று.

     உலகியல் மாயையாலும் மலமாயை கன்மங்களின் மறைப்பாலும் இருள் பட்டுக் கிடந்தமையால் அநீத இருள் நிலையை, “திரைசேர் மறைப்பு” என்று தெரிவிக்கின்றார். அத்திரைசேர் மறைப்பு நீங்கியதும் தெரியாதிருந்த சிவஞானோபாயங்கள் தெரிந்தமை விளங்க, “தெரியா வெல்லாம் தெரிவித்து” என்று கூறுகின்றார். சத்தியோடு கூடிய ஞானாகாசப் பெருவெளியைப் “பரைசேர் ஞானப் பெருவெளி” என்று பிரிக்கின்றார். பரை என்றது சிவசத்தியை, சத்தியோடு கூடிய சிதாகாசத்தில் விளக்கமுறும் பரசிவத்தை, “பெருவெளியில் பழுத்த கொழுத்த பழம்” என்று பாராட்டுகின்றார். மலமாயை கன்மங்கள் காட்டும் காட்சிகளுக்கு அப்பால் உள்ள சிதாகாசச் சிவகாட்சி, “கரை சேர் இன்பக் காட்சி” எனப்படுகின்றது. ஞானக் காட்சி எய்தினாலன்றிச் சிவபோகக் காட்சி கைவராது என்பதுபற்றி, “கரைசேர் இன்பக் காட்சி எல்லாம் காட்டிக் கொடுத்து எனை யாண்ட அரசே” என்று போற்றி அடைக்கலம் புகுகின்றார்.

     (2)