பக்கம் எண் :

4866.

    தேனே அமுதே சிற்சபையில் சிவமே தவமே செய்கின்றோர்
    ஊனே புகுந்த ஒளியேமெய் உணர்வே என்றன் உயிர்க்குயிராம்
    வானே என்னைத் தானாக்கு வானே கோனே எல்லாம்வல்
    லானே ஐயா அம்மாஎன் அப்பா யான்உன் அடைக்கலமே.

உரை:

     தேனாய் இனித்து அமுதமாய் வாழ்விக்கும் ஞான சபையில் விளங்குகின்ற சிவ பரம்பொருளே! தவச் செல்வர்களின் உணர்வில் புகுந்து ஒளிர்கின்ற பரவொளிப் பொருளே! மெய்யுணர்வின் உருவே! என் உயிர்க்குயிராய் நிலவும் ஆகாசமே! எளியனாகிய என்னைத் தானாக்கி உறுதி பெறுவிப்பவனே! தலைவனே! எல்லாம் வல்லவனே! எனக்கு ஐயனும் அம்மையும் அப்பனுமாகிய பரமனே! யான் உன் அடைக்கலமாயினேன் ஏற்றருள். எ.று.

     சிந்திப்பார் சிந்தனையில் தேனாய் ஊறி இனிப்பது பற்றி, “தேனே” என்றும், சிவஞான வாழ்வில் திளைப்பவரை நெடிது வாழச் செய்யும் நீர்மை பற்றி, “அமுதே” என்றும், ஞான சபையில் தனது திவ்விய திருவுருவைக் காட்டி மகிழ்வித்தலால், “சிற்சபையில் சிவமே” என்றும் செப்புகின்றார். தவஞானிகளின் உள்ளத்துள் அருளொளிபுகுத்தி விளங்கச் செய்தலால், “தவமே செய்கின்றோர் ஊனே புகுந்த ஒளியே” எனவும், அருவமாகிய மெய்ஞ்ஞானம் உருக்கொண்டதுபோல் ஒளிர்வது விளங்க, “மெய்யுணர்வே” எனவும் இசைக்கின்றார். உயிர்க்குயிராய்க் கலந்து உயிராவதன்றி ஞான வானமாய் நிலவுதல் தோன்ற, “என்றன் உயிர்க்குயிராம் வானே” எனப் புகழ்கின்றார். தன்னை அடைய முயலும் சிவஞானிகளுக்குத் தனது உருவும் திருவும் ஒளியும் தந்து உயர்த்துவது பற்றி, “என்னைத் தானாக்கு வானே” என்று சொல்லி அடைக்கலம் புகுகின்றார். எல்லாம் வல்லான் - வரம்பில் ஆற்றல் உடையவன்.

     (3)